விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டத் தீர்மானங்கள்

சட்டமன்றத் தொகுதிச் செயலாளர், மண்டலச் செயலாளர் என புதிய பொறுப்புகள்

முழு மதுவிலக்கை வலியுறுத்தியும் செப். 17 முதல் அக். 2 வரை பிரச்சாரம்
ஆகஸ்டு 17இல் 'தமிழ்நாட்டில் கூட்டணி' ஆட்சி மாநாடு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டத் தீர்மானங்கள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் 19.07.2015 அன்று சென்னை தாம்பரத்தில் உள்ள அம்பேத்கர் மண்டபத்தில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர். காலை 11.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்ற அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

1. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாக அமைப்பில் மாவட்டச் செயலாளர் பொறுப்பு நீக்கப்பட்டு 'சட்டமன்றத் தொகுதிச் செயலாளர்', 'மண்டலச் செயலாளர்' என்னும் புதிய பொறுப்புகள் உருவாக்கப்படுகின்றன. புதிய பொறுப்புக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்படும் வரை தற்போதுள்ள மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் நீடிப்பார்கள். கட்சி அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கவும் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கட்சியைப் பலப்படுத்தவும் இந்த முடிவு மேற்கொள்ளப்படுகிறது. 

2. தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை மூடவும், முழு மதுவிலக்கை அமல்படுத்தவும்  வலியுறுத்தி தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்படும்.  பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கலை நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு வடிவங்களில் இந்தப் பிரச்சார இயக்கம் அமையும்.  கிராமப்புறங்களில் தலித் விதவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமான அரசு மதுக் கடைகளை எதிர்த்து நடைபெறும் இந்தப் பிரச்சார இயக்கத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்பார்கள். 

3.     ஒவ்வோர் ஆண்டும் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 17ஆம் நாள் 'தமிழர் எழுச்சி நாளாக' கொண்டாடப்படுகிறது.  அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்டு 17ஆம் நாள் சென்னை காமராசர் அரங்கில் 'தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி' என்ற தலைப்பில் மாநாடு நடைபெறவுள்ளது. இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் அதில் பங்கேற்கின்றனர்.


இவண்

தொல்.திருமாவளவன்


***

நிகழ்வின் தலைவரின் உரை 


ஒளிப்பதிவு : அகரன்