சன் குழும ஊடகங்களை முடக்க முயற்சி மோடி அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்

சன் குழும ஊடகங்களை முடக்க முயற்சி
மோடி அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்
தொல்.திருமாவளவன் அறிக்கை
 
 
சன் குழுமத்தின் தொலைக்காட்சிகள் மற்றும் பண்பலை வானொலிகளை முடக்கும் முயற்சியில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய சனதா அரசு ஈடுபட்டிருப்பது முற்றிலும் சனநாயகத்திற்கு எதிரானதாகும். மோடி அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.  
 
பண்பலை வானொலிகளுக்கான சன் குழுமத்தின் விண்ணப்பங்களை ஏற்க மறுத்திருப்பதும், சன் குழுமத்திற்கு ‘பாதுகாப்புச் சான்றிதழ்’ வழங்க மறுத்திருப்பதும் திட்டமிட்ட உள்நோக்கத்துடன் கூடிய நடவடிக்கையாகவே தெரிகிறது.  சன் குழுமத்தின் மீது கடந்த காலங்களில் இந்திய தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான எத்தகைய குற்றச்சாட்டும் இல்லை.  இந்தியா முழுவதும், பல்வேறு மொழிகளில் அனைத்துத் தரப்பு மக்களின் நன்மதிப்பைப் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கும் மிகச் சிறந்த ஊடகங்களாக சன் குழுமத்தின் தொலைக்காட்சிகளும், பண்பலை வானொலிகளும் இயங்கி வருகின்றன.
 
இந்நிலையில், திடீரென சன் குழுமத்திற்கு எதிரான நிலைப்பாட்டை இந்திய அரசு மேற்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.  கருத்துரிமைக்கு எதிரான இந்த எதேச்சதிகாரப் போக்கு சன் குழுமத்திற்கு எதிராக மட்டுமின்றி நாளடைவில் பிற ஊடகங்களுக்கு எதிராகவும் அமையும் நிலை உருவாகும்.  இந்திய இறையாண்மைக்கு எதிராகவோ, தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவாகவோ, சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக அமைதிக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலோ சன் குழுமத்தின் ஊடகங்கள் ஒருபோதும் செயல்பட்டதில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
 
தற்போது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டும் தொலைத்தொடர்பு கருவிகளைப் பயன்படுத்தியதன் அடிப்படையில் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் விசாரணையில் இருந்து வருகின்றன.  அதன் மீதான தீர்ப்பு எதுவும் வெளியாகவில்லை. இத்தகைய சூழலில், சன் குழுமத்தின் அனைத்து ஊடகங்களையும் முடக்கும் முயற்சியில் பாரதிய சனதா அரசு ஈடுபடுவது சனநாயகத்தின் மூச்சை அடக்கும் முயற்சியாகும்.  தனிப்பட்ட முறையிலான விருப்பு, வெறுப்பு உணர்வுகளைக் கைவிட்டு சனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு மோடி அரசு முன்வர வேண்டும்.  சன் குழுமத்திற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வரும் வரையில் அந்நிறுவனத்தின் ஊடகங்கள் மீது அடக்குமுறைகளை ஏவும் போக்கைக் கைவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது. 
 
இதனை ஒரு குறிப்பிட்ட ஊடகத்திற்கு எதிரான நடவடிக்கையாகக் கருதாமல் சனநாயகத்திற்கு எதிரான பேராபத்து என்பதனை உணர்ந்து அனைத்து சனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து உரத்துக் குரலெழுப்ப வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்