பாலவித்யாமந்திர் பள்ளி பிரச்சனையில் உடனடியாகத் தீர்வு காண வேண்டும்

பாலவித்யாமந்திர் பள்ளி பிரச்சனையில்
உடனடியாகத் தீர்வு காண வேண்டும்
தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

சென்னையில் உள்ள பெருமைமிக்க பள்ளிகளில் ஒன்றான பாலவித்யா மந்திர் பள்ளியில் கடந்த 2 வாரங்களுக்கு மேல் பெற்றோர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.  மாநிலம் முழுவதும் பள்ளி ஆரம்பித்து பல நாட்களான பின்னாலும்கூட இந்தப் பிரச்சனை தொடர்ந்துகொண்டிருக்கிறது.  இதில், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

பாலவித்யா மந்திர் பள்ளியில் சுமார் 1500 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  அங்கே அரசு நிர்ணயித்த கட்டணமான சுமார் ரூ. 32,000 முதல் ரூ. 39,000 வரை செலுத்துகிற மாணவர்களை பாரபட்சமாக பள்ளி நிர்வாகம் நடத்தி வருகிறது.  அவர்களுக்கு அரை நாள் மட்டும் வகுப்பு நடத்துவதும், சுமார் ரூ. 90,000 வரை சிறப்புக் கட்டணம் செலுத்துகிற மாணவர்களுக்கு முழுநாள் பள்ளி நடத்துவதுமாக மாணவர்களிடையே கட்டணத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுகிறது.  இது, தமிழ்நாட்டின் எந்தவொரு பள்ளியிலும் இல்லாத கொடுமையாகும்.  இதைத் தட்டிக்கேட்ட பெற்றோர்களுக்கு ஆதரவாக இருந்த ஆசிரியர்களும் நிர்வாக அதிகாரியும் பள்ளி நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டுள்ளனர்.  இதனால் அங்கு மாணவர்கள் கல்வி பயில முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.  இந்தப் பிரச்சனை ஊடகங்களின்வாயிலாக கடந்த 2 வாரங்களாக வெளிப்படுத்தப்பட்டபோதும் தமிழக அரசின் கல்வித் துறை பாராமுகமாக இருந்து வருவது வேதனை அளிக்கிறது.  இந்தப் பள்ளியில் கடைபிடிக்கப்படும் பாகுபாட்டை அனுமதித்தால் தமிழ்நாட்டின் பிற பள்ளிகளும் அதே நடைமுறையைப் பின்பற்றக்கூடிய ஆபத்து உள்ளது.  எனவே, தமிழக அரசு இதில் விரைந்து தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்
.
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி முதல் தொழிற்கல்வி வரை வணிகமயமாகிவிட்டது.  ஏழை எளியோர் அரசாங்கப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் மட்டுமே நம்பியிருக்கிறார்கள்.  தமிழக அரசு, அரசுப் பள்ளிகளையும், அரசுக் கல்லூரிகளையும் கல்வித் தரத்தில் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.  அது ஒன்றே இத்தகைய கல்விச் சீர்கேடுகளுக்குத் தீர்வாக அமையும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்