உறையில் அடைத்து விற்கப்படும் அனைத்துவிதமான உணவுப் பண்டங்களையும் சோதனைக்குட்படுத்த வேண்டும்!

உறையில் அடைத்து விற்கப்படும்  அனைத்துவிதமான உணவுப் பண்டங்களையும் சோதனைக்குட்படுத்த வேண்டும்!
தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

 
மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக உப்பு, காரீயம் போன்றவை இருப்பது கண்டறியப்பட்டு இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. காரீயம் மட்டுமின்றி ‘அஜினோமோட்டொ’ என அழைக்கப்படும் ‘மோனோசோடியம் குளுட்டாமேட்’ என்ற வேதிப்பொருளும் மேகி நூடுல்ஸில் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்போது தடை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் இத்தனை காலமும் இந்த நூடுல்ஸை சாப்பிட்ட நமது குழந்தைகளின் உடல்நலக் கேட்டுக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழவே செய்கிறது. 

பல ஆண்டுகளுக்கு முன்பே, ‘அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்’ (சிஎஸ்இ) என்ற அமைப்பு மேகி நூடுல்ஸ் உள்ளிட்ட உறையில் அடைத்து விற்கப்படும் குழந்தைகளுக்கான நொறுக்குத்தீனிகளை ஆய்வுசெய்து அவற்றில் உடல்நலத்துக்குக் கேடான வேதிப்பொருட்கள் இருப்பதை அம்பலப்படுத்தியது. ஆனால் அப்போதெல்லாம் அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் நம் குழந்தைகளின் உடல்நலம் காப்பாற்றப்பட்டிருக்கும். 

உறையில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களில் என்னென்ன வேதிப்பொருட்கள் உள்ளன என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும் என்பது பல்வேறு நாடுகளிலும் நடைமுறையில் உள்ள விதி.  ஆனால் அப்படியான விதி இந்தியாவில் இல்லை. அதற்காக உடனே மத்திய அரசு சட்டம் இயற்றவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

மேகி நூடுல்ஸ் மட்டுமின்றி லேஸ், அங்கிள் சிப்ஸ், பிங்கோ முதலான உருளைக்கிழங்கு சிப்ச்களிலும், பெப்சி, கொக்கோ கோலா போன்ற குளிர்பானங்களிலும், பாட்டிலில் அடைத்து விற்கப்படும் மினரல் வாட்டரிலும் உடல்நலத்துக்குக் கேடுபயக்கும் பல்வேறு பொருட்கள் கலந்திருப்பதாக சூழலியலாளர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். அவற்றையும் உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்த அரசாங்கம் முன்வரவேண்டும். 

உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது கொலை முயற்சிக்கு சமமான குற்றம் என ஆக்கப்படவேண்டும். பொது சுகாதாரம் என்பது நாளுக்குநாள் அரசாங்கத்தால் கைவிடப்படும் நிலையில் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் இப்படி உணவுப் பண்டங்கள் விற்பதை அனுமதிப்பது மக்களின் உயிரை விலைபேசுவதற்குச் சமம் என்பதை மத்திய மாநில அரசுகள் உணரவேண்டும். 

உணவுப் பொருட்களில் கலப்படம் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வுக்கூட வசதிகளும், அதற்கான பணியாளர்களும் போதுமான எண்ணிக்கையில் இல்லை. இந்தக் குறையை தமிழக அரசு உடனடியாகச் சரிசெய்யவேண்டும் என வலியுறுத்துகிறோம். 
இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டு மக்களின் உயிரோடு விளையாட இனியும் அனுமதிக்கக்கூடாது.  மேகி நூடுல்ஸைத் தடை செய்ததோடு கடமை முடிந்தது எனக் கருதாமல் அனைத்து வகையான உணவுப் பண்டங்களையும் முழுமையாக ஆய்வுசெய்து முடிக்கும்வரை இத்தகைய உணவுப் பண்டங்கள் குறித்த விளம்பரங்கள் அனைத்தையும் ஊடகங்களில் தடைசெய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்