முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரளாவை அனுமதிப்பதா?

முல்லைப் பெரியாறில் 
புதிய அணை கட்ட கேரளாவை அனுமதிப்பதா?
தமிழர் விரோத மோடி அரசுக்கு தொல்.திருமாவளவன் கண்டனம்

 
முல்லைப் பெரியாறின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆய்வை மேற்கொள்ள மோடி அரசு கேரளாவுக்கு அனுமதி அளித்திருக்கிறது என்ற செய்தி தமிழக மக்களைப் பேரிடியாகத் தாக்கியிருக்கிறது. மோடி அரசின் இந்தச் செயல் தமிழர்களுக்கு இழைக்கும் அப்பட்டமான துரோகம் மட்டுமின்றி, இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கே உலை வைக்கும் ஒன்றாகும்.  இந்திய அரசு வழங்கியிருக்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

முல்லைப் பெரியாறின் குறுக்கே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திரு.பென்னிகுயிக் அவர்களால் கட்டப்பட்ட அணைதான் தென்தமிழக மக்களின் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கிவருகிறது.  சுமார் 1 கோடி மக்கள் அதனால் பயனடைந்து வருகின்றனர்.  அந்த அணை பழுதாகிவிட்டது என்றும் அதனை உடைக்க வேண்டுமென்றும் கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது.  தமிழ்நாட்டின் சார்பில் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணை வலுவாகத்தான் இருக்கிறது, அதில் 152 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ள தமிழக அரசுக்கு உரிமை உண்டு எனத் தீர்ப்பளித்துவிட்டது.  அதற்குப் பிறகும்கூட கேரள அரசு பிடிவாதமாக புதிய அணையைக் கட்டுவோம் என குறுகிய அரசியல் நோக்கத்துக்காகக் கூறி வருகிறது.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்தியிலிருக்கும் மோடி அரசு துணைபோவது இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கே கேடு விளைவிப்பதாகும்.  தற்போது, புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் ஆய்வை மேற்கொள்வதற்கு மோடி அரசு அனுமதி அளித்திருப்பது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய துரோகமாகும்.  இதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.  தமிழக அரசும், தமிழ்நாட்டிலிலுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கேரள அரசின் இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்

தொல்.திருமாவளவன்