விடுதலைச் சிறுத்தைகளின் விருது வழங்கும் விழா 2015

மே 2ஆம் நாள், சென்னையில்
விடுதலைச் சிறுத்தைகளின் விருது வழங்கும் விழா
   
ஆண்டுதோறும் ஏப்ரல் 14 அன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை ‘சிறுத்தைகள் கொண்டாடும் சித்ணிரைத் திருவிழா’வாக விடுதலைச் சிறுத்தைகள் கொண்டாடி வருகிறது.  1990 முதல் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நடத்தப் பெற்ற இவ்விழா, 1995 முதல் வடமாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. பேரணி, மாநாடு, பொதுக்கூட்டம், எளியோருக்கு உதவுதல் என நடத்தப்பட்டுவந்த இவ்விழாவானது, 2007 முதல் விருதுகள் வழங்கும் விழாவாகப் பரிணாமம் பெற்றது.  ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காகப் பாடுபட்டுவரும் தலித் அல்லாத சான்றோரைப் போற்றும் வகையில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பெயரில் ‘அம்பேத்கர் சுடர்’ என்னும் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
முதன்முதலாக இவ்விருது பேராசிரியர் பிரபா.கல்விமணி அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு பாராட்டுப் பட்டயம், நினைவுக் கேடயம் மற்றும் ரூபாய் 25,000 பொற்கிழி ஆகியவை வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.  பின்னர், 2008 முதல் அம்பேத்கர் சுடர் விருதுடன், பெரியார் ஒளி, அயோத்திதாசர் ஆதவன், காமராசர் கதிர், காயிதேமில்லத் பிறை, மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளும்  சான்றோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு ரூ. 25,000மாக வழங்கப்பட்ட பொற்கிழி 50,000 ரூபாயாக வழங்கப்படுகிறது.

தாழ்த்தப்பட்டோருக்கெனப் பாடுபடுவோரை ஊக்கப்படுத்துவதும், தலித் அல்லாத சனநாயக சக்திகளை அடையாளப்படுத்துவதும், தலித் மற்றும் பிற சமூகத்தினருக்கிடையில் நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்பதும் விடுதலைச் சிறுத்தைகளின் கடமை என்கிற வகையில் இவ்விழா ஆண்டுதோறும் ஒருங்கிணைக்கப்படுகிறது.

2015 ஏப்ரல் 14, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் பிறந்த நாள் விழா தமிழகமெங்கும் ஊர்தோறும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கொண்டாடப்பட்டது.  அத்துடன் ஏப்ரல் 25 அன்று மதுரையில் விடுதலைச் சிறுத்தைகளின் வெள்ளி விழா நடைபெற்றது.  எனவே, விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் வழங்கும் விழா 2015 மே 2 அன்று ஒருங்கிணைக்கப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் இவ்விருதுகள், சமூகம், அரசியல், பண்பாட்டுத் தளங்களில் சிறப்பாகப் பணியாற்றும் சான்றோர் ஆறு பேரை அடையாளம் கண்டு வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2015ஆம் ஆண்டுக்கான விருதுகள் 

எழுத்தாளர் அருந்ததிராய் (அம்பேத்கர்சுடர்), 
கோவை கு.இராமகிருட்டிணன் (பெரியார்ஒளி), 
முனைவர் க.நெடுஞ்செழியன் (அயோத்திதாசர்ஆதவன்), 
அமரர் ஜி.கே.மூப்பனார் (காமராசர்கதிர்), 
பேராசிரியர் ஜவாஹிருல்லா (காயிதேமில்லத்பிறை), 
முனைவர் ஔவை நடராசன் (செம்மொழிஞாயிறு) 

ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

இவண்
தொல்.திருமாவளவன்