மோடி அரசின் ஓராண்டு சாதனை - தொல்.திருமாவளவன் கேள்வி

தலித்துகளுக்கு எதிராக அதிகரிக்கும் வன்கொடுமைகள்!
தலித்துகளுக்கான பட்ஜெட் நிதி குறைப்பு!
மோடி அரசின் ஓராண்டு சாதனை இதுதானா?
தொல்.திருமாவளவன் கேள்வி

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவியேற்று ஓராண்டு முடிந்துவிட்டது. இந்த ஓராண்டில் நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. அதுதான் இந்த ஆட்சியின் சாதனை என்று சொல்லவேண்டும். 

கடந்த மார்ச் மாதம் வரையிலான 300 நாள் பாஜக ஆட்சியில் நாடெங்கும் 600 வகுப்புவாத வன்முறைகள் நடைபெற்றுள்ளன.  அதில் 451 தாக்குதல்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவும், 149 தாக்குதல்கள் கிறித்தவர்களுக்கு எதிராகவும் நடைபெற்றன என்றும், அந்தத் தாக்குதல்களில் 43 பேர் கொல்லப்பட்டனர் எனவும் 'சப்ரங்' என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

பாஜக அரசின் ஆதரவுபெற்ற இந்துத்துவ அமைப்புகளின் மீள்மதமாற்றம், மாட்டிறைச்சி உண்ணத் தடை முதலான மதவாத நடவடிக்கைகளால் தலித்துகள் பாதிக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல் பாஜக ஆளும் மகராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ஹரியானா முதலான மாநிலங்களில் தலித்துகள் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. 

நிலப் பறிப்பு மசோதாவை இரண்டுமுறை அவசரச் சட்டமாகப் பிறப்பித்த மோடி அரசு காங்கிரஸ் ஆட்சியின் கடைசிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட வன்கொடுமைத் தடுப்பு திருத்த அவசரச் சட்டத்தைக் காலாவதியாக விட்டது அதன் தலித் விரோதப் போக்குக்குச் சான்றாகும். 
தலித்துகளுக்கும் பழங்குடி மக்களுக்கும் பட்ஜெட்டில் ஒதுக்கவேண்டிய நிதியில் மிகப்பெரிய மோசடியை மோடி அரசு செய்துள்ளது.  தாழ்த்தப்பட்டோர் துணைத் திட்டத்தின் (எஸ்சிஎஸ்பி) அடிப்படையில் 77,236 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கியிருக்க வேண்டும்.  ஆனால், மோடி அரசாங்கம் 30,850கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது. பழங்குடியினர் துணைத் திட்டத்தின் (டிஎஸ்பி) அடிப்படையில் 40,014 கோடி ஒதுக்குவதற்கு பதிலாக வெறும் 19,980கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
 
இவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கும்போது மோடி தலைமையிலான பாஜக அரசு அப்பட்டமான தலித் விரோத அரசாகச் செயல்படுகிறது என்றே கூறத் தோன்றுகிறது. 
இனிவரும் ஆண்டுகளிலாவது தனது போக்கை பாஜக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு நேர்ந்த கதிதான் பாஜக அரசுக்கும் ஏற்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எச்சரிக்கையாகக் கூறிக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்