தொல்.திருமாவளவன் மே நாள் வாழ்த்து

உழைக்கும் வர்க்கத்தினரைப் பற்றிச் சிந்திக்கவும், 
அவர்களின் மீட்சிக்காகப் போராடவும் உறுதியேற்க சூளுரைப்போம்
தொல்.திருமாவளவன் மே நாள் வாழ்த்து

உலகம் முழுவதும் உழைக்கும் தொழிலாளர் வர்க்கம் கொண்டாடும் உன்னதத் திருநாள் மே நாள் ஆகும்.  உழைக்கும் மக்களுக்கு எதிரான முதலாளித்துவச் சுரண்டலை எதிர்த்து உழைப்போருக்கான உரிமையை நிலைநாட்டிய இந்த நன்னாளில், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

உழைக்கும் வர்க்கத்தின் அளப்பரிய பங்களிப்பால் ஆண்டின் ஒவ்வொரு நாளும் சிறப்புக்குரிய நாளாக மலர்கிறது.  ஆனால், உழைப்போருக்கோ ஒவ்வொரு நாளும் வலி மிகுந்த நாளாகவே கழிகிறது.  உழைக்கும் மக்களுக்கு எதிரான ஆதிக்கம், ஒடுக்குமுறைச் சுரண்டல் ஆகியவை இந்த 21ஆம் நூற்றாண்டிலும் உலகம் முழுவதும் மேலோங்கியே உள்ளது.  விவசாயத் தொழிலாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள், அமைப்புச்சாராத் தொழிலாளர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் என அனைத்துத் தரப்புத் தொழிலாளர் வர்க்கமும் இன்னும் வறுமைக் கொடுமைகளிலிருந்து மீள முடியாமல் வாடும் அவலம் நிலவுகிறது.  குழந்தைத் தொழிலாளர் முறை, மனிதனின் மலத்தை மனிதனே அள்ளும் அவலம் ஆகிய கொடுமைகளை இந்திய மண்ணில் இன்னும் ஒழிக்க இயலவில்லையென்பது வெட்கக் கேடானதாகும்.  பள்ளிக்குச் செல்லவேண்டிய பிள்ளைகள், ஓடி ஆடி விளையாட வேண்டிய பிஞ்சுப் பருவத்தில், கல் சுமக்கவும், பீடி சுருட்டவும், தீப்பெட்டி-பட்டாசு செய்யும் வேலைகளிலும் ஈடுபடுத்தப்படும் அவலம் குறைந்தபாடில்லை.  வீட்டுப் பணியாளர்களாக வாழ்க்கை நடத்தும் பெண்கள் படும் வேதனைகள் விவரிக்க இயலாதவை.  கல் குவாரைகளிலும், செங்கல் சூளைகளிலும், பெருந்தோட்டப் பண்ணைகளிலும் சிக்கித் தவிக்கும் கொத்தடிமைச் சமூகத்திற்கு இன்னும் இங்கே விடிவில்லை.  

இத்தகையதொரு சூழலில்தான், ஆண்டில் ஒரு நாள் மே நாள் எனக் கொண்டாடுகிறோம்.  தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரைப் பற்றிச் சிந்திக்கவும், அவர்களின் மீட்சிக்காகப் போராட உறுதியேற்கவும் இந்த நாளில் சூளுரைப்போம் என விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வேண்டுகோள் விடுப்பதுடன், உழைக்கும் வர்க்கத்தினர் யாவருக்கும் மீண்டும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்