2ஆம் ஆண்டு நினைவு நாள் சிவந்தி ஆதித்தனார் புகழ் நிலைத்து நிற்கும் தொல்.திருமாவளவன் அறிக்கைதமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் வழித்தோன்றல் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் அவரை நினைவுகூர்வதில் விடுதலைச் சிறுத்தைகள் பெருமை கொள்கிறது.

ஊடகத் தளத்தில் எவராலும் எட்ட முடியாத இமாலயச் சாதனை படைத்த சி.பா. ஆதித்தனார் அவர்களின் வழியில் சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தொடர்ந்து ‘தினத்தந்தி’ நாளேட்டை அடித்தட்டு மக்களின் நம்பிக்கைக்குரிய ஏடாக நிலைநாட்டிய பெருமைக்குரியவர்.  ‘மாலை மலர்’, ‘தந்தி தொலைக்காட்சி’ என தினத்தந்தி குழுமத்தை விரிவுபடுத்தி வலிமைப்படுத்தியவர்.  ஊடகத் தளத்தில் மட்டுமின்றி, கல்வி, விளையாட்டு, பண்பாடு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் ஏழை எளிய மக்கள் ஏற்றம்பெறும் வகையில் அளப்பரிய பணிகளை ஆற்றியவர்.  அதனால் அனைத்துத் தரப்பினரின் நெஞ்சமெல்லாம் நிறைந்தவர்.  

தமது தந்தையைப் போலவே ஈழத் தமிழர்களின் நலன்களிலும் தீவிரமான அக்கறை கொண்டவர்.  சாதி, மதம், கட்சி போன்ற வேறுபாடுகளின்றி அனைத்துச் சமூகத்தினரோடும் நல்லிணக்கம் பேணியவர்.  நேர்மையாக உழைத்தால் நிலையான புகழை ஈட்ட முடியும் என்பதற்குச் சான்றாக விளங்கியவர்.  அவரது நேர்மையும் உழைப்பும் தமிழ்ச் சமூகத்தில் அவருக்கு நீங்காப் புகழை நிலைக்கச் செய்துள்ளது.  

இத்தகைய சிறப்புக்குரிய சாதனையாளர் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் புகழ் ஓங்குக என விடுதலைச் சிறுத்தைகள் தமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.

இவண்
தொல்.திருமாவளவன்