சீத்தாராம் யெச்சூரி தேர்வு இடதுசாரிகளுக்கும் ஒடுக்கப்பட்டோர் இயக்கங்களுக்குமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக 
சீத்தாராம் யெச்சூரி தேர்வு
இடதுசாரிகளுக்கும் ஒடுக்கப்பட்டோர் இயக்கங்களுக்குமான 
ஒருங்கிணைப்பை ஏற்படுத்துங்கள்

தொல்.திருமாவளவன் வாழ்த்து


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தோழர் சீத்தாராம் யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மதவாத சக்திகளின் அச்சுறுத்தலிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவதிலும், இடதுசாரிகளுக்கும் ஒடுக்கப்பட்டோர் இயக்கங்களுக்கும் ஒருங்கிணைப்பை உருவாக்குவதிலும் முனைப்போடு பணியாற்ற அவர் தம்மை அர்ப்பணித்துக்கொள்ளவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

சென்னையில் பிறந்த யெச்சூரி மாணவப் பருவம் முதலே அரசியலில் ஈடுபட்டுவந்தவர். இந்திய மாணவர் சங்கத்தில் பல பொறுப்புகளை வகித்தவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது அவசர நிலைக் காலத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்தார். கடந்த பத்து ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராகத் திறம்படப் பணியாற்றி வருகிறார். குடியரசுத் தலைவர் உரைமீது அவர் கொண்டுவந்த திருத்தத் தீர்மானத்தின் காரணமாக மோடி அரசாங்கம் மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட்டது அவரது அரசியல் திறமைக்கு அடையாளமாகும்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவரும் மாநாட்டில் தனியார் துறையில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டுமென்றும் அதற்காக நாடுதழுவிய போராட்டங்களை நடத்தப்போவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அந்தத் தீர்மானத்துக்கு செயல்வடிவம் கொடுக்க தோழர் சீத்தாராம் யெச்சூரி சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

அரசியல் களத்தில் மதவாத சக்திகள் இன்று ஆதிக்கம் பெற்றுள்ளனர். தேச பக்தி தமக்கே சொந்தம் எனப் பேசிய அவர்கள் இன்று நாட்டை பன்னாட்டு முதலாளிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் கூறுபோட்டு விற்க முற்பட்டுள்ளனர். இந்திய விவசாயிகளையும் நிலத்தை நம்பி வாழும் கோடிக் கணக்கான விவசாயத் தொழிலாளர்களையும் ஒழித்துக் கட்டும் நோக்கத்தோடு நிலப் பறிப்பு மசோதாவை சட்டமாக்கத் துடிக்கின்றனர். இதைத் தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு சிபிஐ (எம்) உள்ளிட்ட ஜனநாயக சக்திகளுக்கு உள்ளது.

இந்திய இடதுசாரி இயக்கம் தேர்தல் களத்தில் கடுமையான பின்னடைவை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் தோழர் யெச்சூரி அவர்கள் இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும், மதச்சார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்டுவதிலும் முக்கிய பங்காற்றவேண்டும்.  அவருக்கும் புதிதாகப் பொறுப்பேற்கும் அனைத்துத் தோழர்களுக்கும் எம் வாழ்த்துகள்.

இவண்
தொல்.திருமாவளவன்