நமக்கு முன்னாலிருக்கும் மூன்று சவால்கள்

- ரவிக்குமார்
=====================
( 14.04.2015 அன்று புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் ஒருங்கிணைத்த புரட்சியாளர் அம்பேத்கரின் 125 ஆவது பிறந்தநாள் விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கம் )
========================
புரட்சியாளர் அம்பேத்கரின் நூற்று இருபத்தைந்தாவது பிறந்தநாளை சிறப்பான முறையில் கொண்டாடிக் கொண்டிருக்கும் புதுச்சேரி மாநில விடுதலைச் சிறுத்தைகளைப் பாராட்டுகிறேன். இது நமது கட்சியின் இருபத்தைந்தாவது ஆண்டு. வெள்ளிவிழா ஆண்டு. அம்பேத்கர் நூற்றாண்டின்போது இந்தியாவெங்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் வீறுகொண்டு எழுந்தார்கள். பல்வேறு இயக்கங்களாகத் திரண்டார்கள். நமது கட்சியும்கூட அப்படி உருவானதுதான். இது கொண்டாடுவதற்கான நேரம் மட்டுமல்ல, இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தலித் இயக்கங்கள் சாதித்தது என்ன என்பதை சீர்தூக்கிப் பார்ப்பதற்கான தருணம் இது.

இந்திய அளவில் என்ன நடந்திருக்கிறது? பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான இயக்கம், கின்னஸ் சாதனை படைத்த ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சி, ராம்தாஸ் அத்வாலேவின் கட்சி, கான்ஷிராம் அவர்களால் உருவாக்கப்பட்டு செல்வி மாயாவதியால் வழிநடத்தப்படும் பகுஜன் சமாஜ் கட்சி எல்லாமே இந்துத்துவாவுடன் சமரசமாகிவிட்டன. அரசியல் அதிகாரத்துக்காக அம்பேத்கரின் கொள்கையைக் கைகழுவிவிட்டன. விடுதலைச் சிறுத்தைகள் இப்போதும் அதில் உறுதியாக இருக்கிறோம். எழுச்சித் தமிழர் அதில் சமரசம் செய்துகொள்ளக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். இதற்காக நாம் பெருமைபட்டுக்கொள்ளலாம். இங்குமட்டுமல்ல இந்தியா முழுமைக்குமே இந்துத்துவத்துடன் சமரசம் செய்துகொள்ளாத தலித் இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். அதற்காக நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் எத்தனையோ தலித் தலைவர்கள் இருந்தார்கள். இந்திய அளவில் புகழ்பெற்றுத் திகழ்ந்தார்கள். அவர்கள் இயக்கங்களை நடத்தினார்கள். மாநாடுகளைக் கூட்டினார்கள். எத்தனையோ உரிமைகளைப் பெற்றுத் தந்தார்கள். ஆனால் தேர்தல் களத்தில் அவர்கள் செய்யாத சாதனையை எழுச்சித் தமிழர் செய்திருக்கிறார். தமிழக சட்டமன்ற வரலாற்றில் தனி சின்னத்தில் நிற்கவைத்து இரண்டுபேரை தமிழக சட்டப்பேரவைக்குள் அனுப்பிய பெருமை அவரைத்தான் சாரும். இந்தியாவின் பெரிய பெரிய தலித் தலைவர்கள் தோற்றபோது வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் நுழைந்த சாதனையாளர் அவர். இதற்காக நாம் பெருமைபட்டுக்கொள்ளலாம்.

விடுதலைச் சிறுத்தைகள் உருவானபிறகு ஒடுக்கப்பட்ட மக்கள் தலைநிமிர்ந்திருக்கிறார்கள். அவர்கள்மீதான வன்கொடுமைகள் குறைந்திருக்கின்றன. சாதி பெயரைச் சொல்லிக் கூப்பிட்டவர்களெல்லாம் இன்று சிறுத்தை என அச்சத்தோடு நம் இளைஞர்களைக் குறிப்பிடுகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக நாம் பெருமைபட்டுக்கொள்ளலாம்.

ஆனால் அரசியல் தளத்தில் நாம் செல்லவேண்டிய தூரம் அதிகம். சாதிக்கவேண்டியவை ஏராளம். சட்டமன்றங்களிலும் பாராளுமன்றத்திலும் நமக்கு அம்பேத்கர் அரசியல் இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தார். ஆனால் மாநிலங்களவையிலும் மேலவைகளிலும் இட ஒதுக்கீடு இல்லை. அதை வென்றெடுக்கவேண்டிய கடமை நம் முன்னால் உள்ளது.

கல்வியிலும் அரசு வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டை அம்பேத்கர் பெற்றுத் தந்தார். இப்போது அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது. எல்லாம் தனியார்மயம் ஆகிக்கொண்டிருக்கிறது. தனியார் துறையில் இட ஒதுக்கீட்டைப் பெற்றால்தான் படித்த நம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். அதை வென்றெடுக்கவேண்டிய கடமை நமக்கு முன்னால் இருக்கிறது.

1936 ஆம் ஆண்டு மதமாற்றம் குறித்து நிகழ்த்திய புகழ்பெற்ற உரையில் அம்பேத்கர் ஒன்றைக் குறிப்பிட்டார். "ஒரு சமூகத்துக்கு மூன்றுவிதமான பலம் இருக்கவேண்டும். முதலாவது ஆள்பலம். தலித் சமூகம் ஒப்பீட்டளவில் சிறுபான்மை சமூகம். இந்துக்களோடு வைத்துப் பார்த்தால் அதற்கு எண்ணிக்கை பலம் கிடையாது. அடுத்தது பொருளாதார பலம். தலித் சமூகத்தினருக்கு சொந்தமாக தொழிற்சாலைகளோ நிறுவனங்களோ பெரிய அளவில் நிலமோ கிடையாது. ஆள் பலமாவது கொஞ்சம் உண்டு, பொருளாதார பலம் சுத்தமாகக் கிடையாது. மூன்றாவது மனோ பலம். தமக்கு இழைக்கப்படும் அவமானங்களையும் அநீதிகளையும் சகித்துக்கொண்டு எதிர்த்துப் பேசாமல் கிடக்கும் நமது மக்களுக்கு மனோபலம் என்பது கொஞ்சமும் கிடையாது. " என அம்பேத்கர் குறிப்பிட்டார்.

"இப்போது உங்களுக்கு இருக்கும் பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு நீங்கள் இந்துக்களின் சர்வாதிகாரத்தை எதிர்கொள்ள முடியாது. சிறுபான்மையினராக இருப்பதால் இந்த நிலை என நான் சொல்லமாட்டேன். முஸ்லிம்கள்கூடத்தான் சிறுபான்மைதினராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் வம்புக்குச் செல்ல ஒருவரும் துணிவதில்லை. ஒரு ஊரில் இரண்டு முஸ்லிம் வீடுகள் இருந்தால்கூட பயப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்களிடம் தொந்தரவு செய்தால் இந்தியாவிலிருக்கும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் அவர்களுக்காக வருவார்கள் என்பது இந்துக்களுக்குத் தெரியும். அதனால் பயப்படுகிறார்கள். தலித்துகளை ஒடுக்கினால் அவர்களுக்கு ஆதரவாக எவரும் வரமாட்டார்கள் என்பது இந்துக்களுக்குத் தெரியும் அதனால்தான் உங்கள்மீது வன்முறையை ஏவ அவர்கள் தயங்குவதில்லை" என்று அம்பேத்கர் சொன்னார்.

தலித் மக்கள் இந்துக்களின் சர்வாதிகாரத்தை எதிர்கொள்ளவேண்டுமென்றால் அதற்கு வெளியிலிருந்து ஆதரவை அவர்கள் பெறவேண்டும் என்று சொன்ன அம்பேத்கர் அதற்காகத்தான் மதமாற்றத்தை முன்மொழிந்தார். அவர் மதம் மாறி சுமார் அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் விளைவுகள் அம்பேத்கர் எதிர்பார்த்தபடி அமைந்தனவா என்று நாம் ஆராயவேண்டும். தலித் மக்களின் பலத்தை அதிகரிக்கவேண்டும் என்பதற்காக அவர் தேர்ந்தெடுத்த பௌத்தம் உண்மையிலேயே அவர்களுக்கு உதவியதா? என்று பார்க்கவேண்டும். இல்லாவிட்டால் அம்பேத்கர் வழியிலேயே அதற்கான புதிய தீர்வைக் கண்டுபிடிக்கவேண்டும். தலித் மக்களின் வலிமையை அதிகரிக்கச் செய்வதற்கான வழிகளை ஆராயவேண்டும்.

தொகுத்துச் சொன்னால் நமக்கு முன்னால் மூன்று சவால்கள் உள்ளன: அரசியல் தளத்தில் மாநிலங்களவையிலும் சட்ட மேலவைகளிலும் இட ஒதுக்கீட்டை வென்றெடுப்பது; பொருளாதாரத் தளத்தில் பொதுச் சொத்துகளில் உரிய பங்குக்காகவும், தனியார் துறையில் இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காகவும் போராடுவது; பண்பாட்டுத் தளத்தில் மதமாற்றம் குறித்து அம்பேத்கர் மேற்கொண்ட முடிவு சரியா, பௌத்தத்தைத் தழுவுவது நமது பலத்தை அதிகரிக்க உதவுமா என மீளாய்வு செய்வது.

இந்த சவால்களை எதிர்கொள்ள அம்பேத்கரின் நூற்று இருபத்தைந்தாவது பிறந்தநாளில் நாம் உறுதியேற்போம். தலித் மக்களின் உரிமைகளை வென்றெடுப்போம். நன்றி, வணக்கம்!