நேபாள பூகம்பம்-உயிர் நீத்தோர்க்கு தொல். திருமாவளவன் இரங்கல்


நேபாளத்தில் நிகழ்ந்த பூகம்பத்தில் சுமார் 1500 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது.  நேபாள மக்களுக்கும் இந்தியாவில் பல மாநிலங்களில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
நேபாளத்தில் நிகழ்ந்துள்ள இயற்கைச் சீரழிவு எவரும் எண்ணிப்பார்க்க முடியாத அளவில் உள்ளது. வரலாற்று புகழ் வாய்ந்த சின்னங்களும் கட்டிடங்களும் சிதைந்து சின்னாபின்னமாகி உள்ளன. அந்த பூகம்பத்தின் தாக்கம் இந்தியாவின் பல மாநிலங்களிலும் உயிரிழப்புகளை பொருளிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இயற்கைச் சீற்றத்திற்கு இழக்காகி நிற்கும் நோபாள அரசுக்கு மாந்தநேயத்தோடு உதவ இந்திய பிரதமர் விரைந்து நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரியதாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

நேபாளத்தில் நேர்ந்ததுபோன்ற பூகம்ப ஆபத்து இந்தியாவின் பல நகரங்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதென அறிவியலாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.  இமயமலை பகுதியில் மேலும் பல பூகம்பங்கள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.  இதைக் கவனத்தில் கொண்டு பூகம்ப ஆபத்துள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திகிறோம்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்களும் பூகம்ப ஆபத்துள்ள பகுதியென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டட அனுமதி உள்ளிட்ட விதிமுறைகளில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அத்தகைய இடங்களில் பூகம்பத்தால் பாதிக்கப்படாத அளவிற்கு வீடுகளை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.