தருமபுரி தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்தருமபுரி மாவட்டடத்தைச் சேர்ந்த ஜடையம்பட்டியில் பள்ளியில் படிக்கும் 14 வயது தலித் சிறுமி, 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இன்னும் ஒருவர் கைது செய்யப்படவில்லையென்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.  மனிதத் தன்மையற்ற இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.  பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாதுகாப்பும் சிகிச்சையும் உளவியல் ஆலோசனைகளும் வழங்கிட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.

பள்ளியில் படிக்கும் அந்த தலித் சிறுமி இரண்டு முறை இதே கும்பலால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.  அதை புகைப்படம் எடுத்து அந்தச் சிறுமியை மிரட்டி இந்தக் கொடுமையைச் செய்துள்ளனர்.  பள்ளியில் படிக்கும் மாணவர்களும் இந்தக் கொடுமையில் ஈடுபட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.  தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பள்ளிச் சிறுமிகள் இப்படி பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.  ஆசிரியர்களும் இத்தகைய வன்கொடுகைகளில் ஈடுபடுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாவதைப் பார்க்கிறோம்.  இவற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சிறார் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கு மத்திய அரசு ‘போக்சா-2012'  (POCSO Act-2012) என்ற சட்டத்தை இயற்றியுள்ளது.  ஆனால் அந்தச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பரவலாக ஏற்படவில்லை.  மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சிபிஎஸ்சி பள்ளிகளில் இந்தச் சட்டம் குறித்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென அண்மையில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  அதைப் போல தமிழக அரசும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போக்சா சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஆணை பிறப்பிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். 

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகளில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக இருக்கின்றனர்.  இதை தமிழக அரசு கவனத்தில்கொண்டு இந்த வன்கொடுமைகளைத் தடுப்பதற்கு உரிய சிறப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்