மாறுபாடுகளையும் வேறுபாடுகளையும் களைந்து ஒருங்கிணைந்து செயல்பட சித்திரை முதல் நாளில் உறுதியேற்போம் தொல்.திருமாவளவன் வாழ்த்து

தமிழ்ச் சமூகத்தின் இந்த நெருக்கடிகளை உணர்ந்து 
அனைத்துத் தரப்பினரும் மாறுபாடுகளையும் வேறுபாடுகளையும் களைந்து ஒருங்கிணைந்து செயல்பட சித்திரை முதல் நாளில் உறுதியேற்போம்

தொல்.திருமாவளவன் வாழ்த்து

 
தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளா? சித்திரை முதல் நாளா? என்கிற விவாதம் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. மறைமலையடிகள் காலத்தில் தமிழறிஞர்கள் ஒன்றுகூடி பண்பாட்டுரீதியான ஆய்வுகளை மேற்கொண்டு தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என தமிழ்ச் சமூகத்திற்கு அறிவிப்புச் செய்தனர். 

சித்திரை முதல் நாள் தமிழ்ச் சமூகத்தை அரசியல், பண்பாட்டு அடிப்படையில் வீழ்த்தி ஆளுமை செய்தவர்கள் அடையாளப்படுத்திய நாளாக அறிய வருகிறது. எனினும், நீண்டகாலமாக சித்திரை முதல் நாள் தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.  இன்னும் சித்திரை முதல் நாளை கிராமப் புறங்களில் மக்கள் கொண்டாடி வருகிற நிலையில், உழைக்கும் மக்களான தமிழ் மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

ஆந்திராவில் 20 தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிற துக்கம் நிறைந்த இச்சூழலில், சித்திரை முதல் நாளைக் கொண்டாடுவது வேதனைக்குரியதாகவே உள்ளது. ஒருபுறம் தமிழக மீனவர்கள் சிங்கள இனவெறியர்களால் வேட்டையாடப் படுகிறார்கள். இன்னொரு புறம் அண்டை மாநில அரசுகளால் தமிழர்கள் பல்வேறு கொடுமைக்குள்ளாக்கப்படுகிறார்கள்.  இந்நிலையில் தமிழ் மக்களையும், தமிழ் மொழியையும், தமிழ் மக்களுக்கான ஆற்று நீர் உள்ளிட்ட அனைத்து வகை உரிமைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம்.  தமிழ்ச் சமூகத்தின் இந்த நெருக்கடிகளை உணர்ந்து அனைத்துத் தரப்பினரும் மாறுபாடுகளையும் வேறுபாடுகளையும் களைந்து ஒருங்கிணைந்து செயல்பட சித்திரை முதல் நாளில் உறுதியேற்போம்.

சித்திரை முதல்நாள்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் மகத்தான தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளாகும்.  தமிழகத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைகளை தமிழக அரசு இரும்புக் கூண்டுகளில் அடைத்துவைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.  அத்துடன், சென்னையில் அவருடைய பெயரில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் கவனிப்பாரின்றி நாளுக்கு நாள் சீர்குலைந்து வருகிறது.  தமிழக அரசு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை மதிக்கும் வகையில் அவருடைய சிலைகளுக்கு அமைக்கப்பட்டுள்ள கூண்டுகள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டுமெனவும், அம்பேத்கர் மணிமண்டபத்தைச் சீரமைத்துப் பராமரிக்க வேண்டும் எனவும் இந்நன்னாளில் விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்