அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி கைது உண்மைப் பின்னணி வெளிவர வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்

முத்துக்குமாரசாமி தற்கொலை - ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி கைது
உண்மைப் பின்னணி வெளிவர
வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்
தொல்.திருமாவளவன் அறிக்கை


தமிழக வேளாண்மைத் துறை பொறியாளர் முத்துக்குமாரசாமி அண்மையில் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.  அவர் தற்கொலை செய்துகொண்டதற்கு வேளாண்மைத் துறை அமைச்சரின் நெருக்கடியே காரணம் என்று தெரிய வந்தது.  அதனால் அவருடைய சாவுக்குக் காரணமான முன்னாள் அமைச்சர் ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி அவர்களைக் கைது செய்ய வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.  சிபிசிஐடி காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி அவர்களை அவ்வழக்கில் கைது செய்துள்ளனர்.

இந்நடவடிக்கை பொதுமக்களிடையே ஆறுதலை ஏற்படுத்தினாலும், இது ஒரு கண்துடைப்பாக இருந்துவிடக் கூடாது என்னும் கருத்து மேலோங்கியுள்ளது.  தமிழகத்தைஆண்டுகொண்டிருக்கிற ஆளும் கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் அமைச்சருமான ஒருவரை தமிழகக் காவல்துறை கைது செய்திருப்பதால் இவ்வழக்கு முறையாக விசாரிக்கப்படுமா? வழக்கின் உண்மைப் பின்னணிகள் வெளிப்படுமா? என்ற ஐயங்கள் எழுகின்றன.  அத்துடன், பணி நியமனங்களில் அமைச்சரின் விருப்பப்படியே அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று வெளிப்படையாக மிரட்டும் அளவுக்கு ஆட்சி நிர்வாகத்தின்போக்கு அமைந்துள்ளது.  வேளாண்மைத் துறையில் மட்டுமின்றி, தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்பட இயலாத நிலை உள்ளது என்பதற்கு முத்துக்குமாரசாமியின் தற்கொலை ஒரு சாட்சியமாக உள்ளது.

எனவே, முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை முறையாக விசாரிப்பதற்கும் உண்மைப் பின்னணியை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கும் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சிபிசிஐடியின் விசாரணையைத் தவிர்க்க வேண்டும். மாறாக,  மையப் புலனாய்வு விசாரணைக்கு (சிபிஐ) ஒப்படைக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்