பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றுவோம்!

பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாகத் 
தமிழ்நாட்டை மாற்றுவோம்!

மகளிர் தினத்தில் தொல்.திருமாவளவன் செய்தி


படிப்பறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து வந்தாலும், பல்வேறு துறைகளில் சாதனைகளை நிகழ்த்துபவர்களாகப் பெண்கள் திகழ்ந்தாலும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடாக இந்தியா மாறிவருவது கவலை அளிக்கிறது.

மதவாதமும் சாதிவாதமும் ஒட்டமொத்த சமூகத்துக்கும் தீங்கிழைப்பதுதான் என்ற போதிலும் அவற்றால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்களாகப் பெண்களே இருக்கின்றனர். பெண்களின் விருப்பங்களை ஒடுக்கி அவர்களது சுதந்திரமான இயக்கத்தை முடக்குவதன்மூலமே மதவாதிகளும் சாதியவாதிகளும் தமது பெருமிதங்களைக் காப்பாற்ற முனைகின்றனர்.  அந்தப் போலிப் பெருமிதமே ஆணவக் கொலைகளுக்கு அடிப்படையாக அமைகிறது. 

2011ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசியக் குற்ற ஆவண மையம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2011ஆம் ஆண்டில் 6,940 புகார்கள் பதிவு செய்யப்பட்டன.  2012ஆம் ஆண்டில் அது 7,192 ஆக உயர்ந்தது. 2013ஆம் ஆண்டிலோ அது 7,475 ஆக அதிகரித்துவிட்டது.

பாலியல் வல்லுறவுக் குற்றங்கள், அதிலும் குறிப்பாக பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் கொடுமை தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  அண்மைக் காலமாக ஆணவக் கொலைகளும் தமிழ்நாட்டில் அதிகமாக நிகழ்ந்து வருகின்றன. 

வளர்ச்சியில் முதல் மாநிலம் என்று கூறுவதைக் காட்டிலும் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பதுதான் பெருமை. இதைத் தமிழக அரசு புரிந்துகொண்டு பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். 

இவண்
தொல்.திருமாவளவன்