ஆதி திராவிட பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை உயர்த்திடுக!

ஆதி திராவிட பழங்குடியின மாணவர்களுக்கு
கல்வி உதவித் தொகையை உயர்த்திடுக!
தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!


தமிழ்நாட்டில் ஆதிதிராவிட நலத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பான்மையான தொகை கல்விக்குத்தான் செலவிடப்படுகிறது.  ஏறத்தாழ ஒன்றரை லட்சம் மாணவர்கள் ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் பயில்கிறார்கள்.  அவர்களுக்குப் பல்வேறு உதவித் தொகைகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு அந்த உதவித் தொகைகள் சிறிய அளவில் உயர்த்தப்பட்டன என்ற போதிலும் தற்போதிருக்கும் விலைவாசி உயர்வுக்கும் அந்த உதவித் தொகைகளுக்கும் எந்தவிதப் பொருத்தமும் இல்லை.  எனவே ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்கிடுமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம். 

பத்தாம் வகுப்புக்கு மேல் விடுதியில் தங்காது பயிலும் ஆதிதிராவிட மாணவ மாணவியர்க்கு ரூ.100/- முதல் ரூ.175/- வரையும், விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியர்க்கு ரூ.175/- முதல் ரூ.350/- வரை தற்போது வழங்கப்படுகிறது.  தற்போதுள்ள விலைவாசி உயர்வைக் கவனத்தில்கொண்டு இந்தத் தொகையை விடுதியில் தங்காது பயிலும் மாணவர்க்கு மாதம் ஒன்றுக்கு 500 ரூபாயும், விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்க்கு மாதம் ஒன்றுக்கு 1000 ரூபாயும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
அயல்நாடுகளில் சென்று பயில்வதற்கென உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்தாலும் அதன்கீழ் எவரும் பயன்பெற முடியாதபடி விதிகள் உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக ஐந்துபேர்கூட அதனால் பயனடையவில்லை. எனவே, அந்த விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

உயர்கல்வி பயிலும் ஆதிதிராவிட மாணவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே உள்ளது. எனவே அவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 12,000 ரூபாயும் முதுநிலைப் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 20,000 ரூபாயும் வழங்க வேண்டும்.

ஆராய்ச்சிக் கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தற்போது ஆண்டுக்கு ஐம்பதாயிரம் என வழங்கப்பட்டுவரும் உதவித் தொகையை மாதம் ஒன்றுக்கு 8,000 ரூபாய் என உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

'கிரீமி லேயர்' முறை ஆதிதிராவிட வகுப்பினருக்குப் பொருந்தாது என உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும் வருமான வரம்பை விதிப்பதன் மூலம் தமிழக அரசு 'கிரீமி லேயர்' முறையை மறைமுகமாகக் கடைப்பிடித்து வருகிறது.  இது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானதாகும். எனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள வருமான வரம்பை முற்றாக நீக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

இவண்

தொல்.திருமாவளவன்