புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது மதவெறியர்கள் தாக்குதல்: கருத்துரிமைக்கு எதிரான வன்முறையைக் கண்டிக்க அனைவரும் முன்வரவேண்டும்




  ‘தாலி பெண்களைச் சிறுமைப்படுத்துகிறதா அல்லது பெருமைப்படுத்துகிறதா?’ என்ற தலைப்பில் ‘உரக்கச் சொல்லுங்கள்’ என்ற நிகழ்ச்சி உலக மகளிர் தினத்தில் ஒளிபரப்பாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என்று கூறி நேற்று அந்தத் தொலைக்காட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பத்துக்கும் மேற்பட்டோர் ரகளையில் ஈடுபட்டனர்.  இவர்கள் இந்து மக்கள் கட்சி, பாரதிய ஜனதா உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதனால் தொலைக்காட்சி அலுவலகத்தைச் சுற்றி பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

போலிஸ் பாதுகாப்பு இருக்கும்போதே இன்று (08.03.2015) புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்துக்கு எதிரில் அந்தத் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளரை நான்கைந்து லாரிகளில் வந்து இறங்கிய ஒரு கும்பல் தாக்கியிருக்கிறது. அவரது காமிராவும் உடைக்கப்பட்டிருக்கிறது. பெண் நிருபரையும் அவர்கள் தாக்க முயன்றுள்ளனர். இந்தத் தாக்குதல் போலிஸ் அதிகாரிகளின் கண்ணெதிரிலேயே நடத்தப்பட்டும் அவர்கள் தடுக்கவில்லை. தாக்கியவர்களை இதுவரை கைதுசெய்யவும் இல்லை என அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாலி மறுப்புத் திருமணங்கள் நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் நடந்து வருகின்றன. திராவிடர் கழகத்தின் சார்பில் தாலி நீக்கும் பொது நிகழ்ச்சிகளும் நடந்துவருவதை நாம் அறிவோம். திருமணமானவர் என்பதன் அடையாளமாகப் பெண் மட்டும் தாலி அணிந்துகொள்ளவேண்டும் ஆனால் ஆணுக்கு எந்த சின்னமும் தேவையில்லை என்பது ஆணாதிக்க அணுகுமுறை தவிர வேறில்லை. இதைப்பற்றி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருந்த நிகழ்ச்சியில் என்ன கருத்துகள் தெரிவிக்கப்பட்டன என்பது தெரியாமலேயே அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படாமல் கைவிடப்பட்ட நிலையிலும் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் மதவாத வன்முறைகளுக்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சியாக இருக்கிறது. அரசியல் தளத்தில் செல்வாக்கு இல்லாத மதவெறி சக்திகள், பண்பாட்டுத் தளத்தில் வன்முறையை ஏவி தமது இருப்பைக் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றன.  இத்தகைய மதவெறி வன்முறைக்கு ஜனநாயக அமைப்பில் இடம் கொடுக்கக்கூடாது.  தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்கவேண்டும்.  கருத்துரிமைக்கு எதிரான இந்தத் தாக்குதலைக் கண்டித்து மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் குரலெழுப்ப வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்