லீ குவான் யூ மறைவுக்கு தொல்.திருமாவளவன் இரங்கல்

ஆதரவாக இருந்த தலைவரைத் தமிழர்கள் இழந்துவிட்டார்கள்
லீ குவான் யூ மறைவுக்கு தொல்.திருமாவளவன் இரங்கல்


சிங்கப்பூரின் சிற்பி என அழைக்கப்படும் லீ குவான் யூ இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சிங்கப்பூரை உலகின் முக்கியமான வளம் மிக்க நாடுகளில் ஒன்றாக உயர்த்திய பெருமைக்காக அவரை எல்லோரும் பாராட்டுவார்கள். ஆனால் பல மொழிகள் பேசும் மக்கள் நிறைந்த அந்த நாட்டில் சிறுபான்மை மொழி பேசும் மலாய் மற்றும் தமிழ் மக்களின் உரிமைகள் எந்தவகையிலும் பாதிக்கப்படாமல் ஆட்சி நடத்தியதே அவரது சாதனைகளில் தலையாயது.

சிங்கப்பூர் தமிழர்களுக்கு மட்டுமின்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் திரு லீ குவான் யூ இருந்தார். “நான் 1956 ஆம் ஆண்டு கொழும்பு நகருக்குச் சென்றேன். அப்போது சிங்கப்பூரைவிட அந்த நகரம் சிரந்து விளங்கியது. தரமான பல்கலைக் கழகங்கள் இருந்தன, படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் அவர்களது தேர்தல் முறை சிங்கள மேலாதிக்கத்துக்கு வழிவகுத்து தமிழர்களை ஒடுக்குவதற்கு வழிவகுத்துவிட்டது” என அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். ‘மலேசியாவும் சிங்கப்பூரும் பிரிந்ததுபோல இலங்கையும் பிரிந்திருந்தால் வளர்ச்சி அடைந்திருக்கலாம்’ என அவர் கருத்து தெரிவித்தார். “கடவுளைக்கூட ஏமாற்றலாம் ஆனால் மக்களை ஏமாற்றமுடியாது” எனச் சொன்ன அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பேட்டியில் ”ராஜபக்சே ஒரு சிங்கள இனவெறியர்” எனச் சாடியிருந்தார். 

சந்தைப் போட்டியையும், திறந்த பொருளாதார அணுகுமுறையையும் ஆதரித்த திரு லீ குவான் யூ வின் பொருளாதாரக் கொள்கைகளில் பலருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரது சமூக அணுகுமுறைகள் எந்தவொரு நாட்டின் பிரதமரும் பின்பற்றத் தக்கவையாகும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு எமது செம்மார்ந்த வீர வணக்கம் செலுத்துகிறோம்.
இவண்

தொல்.திருமாவளவன்