இந்தியாவின் மகள் ஆவணப் படத்துக்கான தடையை நீக்குக!

இந்தியாவின் மகள் ஆவணப் படத்துக்கான 
தடையை நீக்குக!
மோடி அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

நிர்பயா பாலியல் வன்கொடுமைச் சம்பவம் குறித்து உலகப் புகழ்பெற்ற ஆவணப் பட இயக்குனர் லெஸ்லீ உட்வின் தயாரித்துள்ள ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப் படத்துக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை உடனடியாக மத்திய அரசு நீக்க வேண்டும். கருத்துரிமையைப் பறிக்கும் போக்கை நிறுத்திக் கொள்ளவேண்டும் என மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.
நிர்பயா சம்பவத்தில் குற்றவாளியாக இருக்கும் முகேஷ் சிங்கின் பேட்டி அந்த வழக்கின் போக்கில் தாக்கம் ஏற்படுத்தும் என்ற காரணத்தைச் சொல்லி தடையை மத்திய அரசு நியாயப்படுத்தியிருக்கிறது. அது ஏற்புடையதல்ல. அந்த ஆவணப் படத்தில் முகேஷ் சிங்கின் பேட்டி மட்டுமின்றி நிர்பயாவின் பெற்றோர்களது நெஞ்சை உருக்கும் பேட்டிகளும், லீலா சேத், கோபால் சுப்ரமணியம் உள்ளிட்ட சட்ட நிபுணர்களின் பேட்டிகளும் உள்ளன எனத் தெரிகிறது.  அந்தப் படத்தைத் தடை செய்தது சரியல்ல என்று 'எடிட்டர்ஸ் கில்ட்’ உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

தானும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிப் பாதிக்கப்பட்ட ஒரு பெண்தான் எனக் கூறியிருக்கும் லெஸ்லீ உட்வின் அந்த ஆவணப் படத்தை எடுப்பதற்கு உரிய அதிகாரிகளிடம் எல்லாவிதமான சட்டரீதியான அனுமதியையும் பெற்றிருப்பதை ஆதாரப்பூர்வமாக விளக்கியிருக்கிறார்.  அந்த ஆவணப் படம் உலகமெங்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களின் பிரச்சனையைப் பேசுவதாக இருக்கிறது என அதைப் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். அப்படியிருக்கும்போது அதற்குத் தடை விதிப்பது எந்தவகையிலும் நியாயமல்ல. 

இந்தியாவில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகின்றன என்பதை அரசாங்கம் வெளியிடும் புள்ளிவிவரங்களே உறுதிப்படுத்துகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் டெல்லியில் 300 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன என டெல்லி போலிஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸ்ஸி கூறியிருக்கிறார்.  2014ஆம் ஆண்டில் 2,069 கற்பழிப்பு வழக்குகள் டெல்லியில் பதிவாகியுள்ளன. நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு கற்பழிப்புக் குற்றங்கள் நானூறு சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார்

கற்பழிப்புகள் மட்டுமின்றி நாடெங்கும் ஆணவக் கொலைகள் ஒவ்வொரு நாளும் நிகழ்கின்றன. அவற்றைத் தடுத்து பெண்கள் கண்ணியத்தோடும் பாதுகாப்போடும் வாழக்கூடிய நாடாக இந்தியாவை உருவாக்குவதே முக்கியம். அதற்குப் பதிலாக இந்தக் கொடுமைகள் குறித்து பேசக்கூடாது எனத் தடை விதிப்பது எல்லாவற்றையும் மூடிமறைத்து அந்தக் குற்றங்கள் தொடர்ந்து நடைபெறவே ஊக்கமளிக்கும். 

நிர்பயா வழக்கின் முதன்மைக் குற்றவாளி முகேஷ் சிங்கும், அந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்காடும் வழக்கறிஞர்களும் பெண்கள் குறித்து தமது பேட்டிகளில் தெரிவித்துள்ள கருத்துகள் பல்வேறு இந்துத்துவ அமைப்பினர் பெண்ணுரிமைக்கு எதிராகப் பேசிவரும் கருத்துகளைப் போலவே உள்ளன.  அது அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில்தான் மத்திய அரசு தடை விதித்திருக்கிறதோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது.

'இந்தியாவின் மகள்' ஆவணப் படத்துக்கு விதித்திருக்கும் தடையை உடனடியாக மத்திய அரசு விலக்கிக்கொள்ளவேண்டும். நீதிபதி வர்மா கமிஷன் அளித்த பரிந்துரைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவண்

தொல்.திருமாவளவன்