மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை முற்றாகக் கைவிட வேண்டும்! - மத்திய அரசிடம் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை 
முற்றாகக் கைவிட வேண்டும்!
மத்திய அரசிடம் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்


   காவிரிப் படுகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்படவேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்திப் போராடியதன் காரணமாக இப்போது அந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியிருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.  இந்த அறிவிப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. 

மாநிலங்களவையில் பேசிய அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், “ஒப்பந்தம் செய்துகொண்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனம் உரிய ஆவணங்களை ஒப்படைக்காத காரணத்தினாலும் பணியை தொடங்காத காரணத்தினாலும் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனத் தெரிவித்திருக்கிறார். இது மத்திய அரசின் நிலையில் தெளிவற்ற தன்மையைக் காட்டுகிறது. மத்திய அரசின் அறிவிப்பைப் பார்த்தால் வேறு ஏதாவது ஒரு நிறுவனம் உரிய ஆவணங்களைத் தர முன்வந்தால் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகவே கருதவேண்டியுள்ளது. 

வாஜ்பாயி தலைமையிலான பாஜக ஆட்சிக் காலத்தில் 2001ஆம் ஆண்டில்தான் மீத்தேன் எரிவாயு திட்டத்துக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் முப்பது இடங்களில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான அனுமதியை பாஜக அரசு அப்போது வழங்கியது. 

மேற்கு வங்க மாநிலத்தில் ராணிகஞ்ச் என்னுமிடத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டம் இதே கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. அங்கு நீர்நிலைகளும் விளை நிலங்களும் பாழாவதாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.  மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் கேடு விளைவிப்பது என உலக அளவில் அறிவியலாளர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். மக்கள் வாழும் பகுதிகளில், விவசாய நிலங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் ஒப்பீட்டளவில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதாகும். அப்படியிருக்கும்போது தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் இந்தத் திட்டத்தை மத்திய பாஜக அரசு மக்கள் மீது திணிப்பது தமிழர் விரோதச் செயலாகும். 

டெல்டா மாவட்டங்களில் 667 சதுர கிலோ மீட்டர் பகுதியை ’நிலக்கரிப் படுகை மீத்தேன் எரிவாயுப் பகுதி (MG-CBM-2008/IV) என்று அறிவிப்புச் செய்திருப்பதை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இனி தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தை எங்குமே செயல்படுத்தமாட்டோம் என மத்திய அரசு உறுதிமொழி வழங்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

இவண்

தொல்.திருமாவளவன்