மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்குத் தடை தமிழக அரசின் அறிவிப்புக்குப் பாராட்டு!

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்குத் தடை 
தமிழக அரசின் அறிவிப்புக்குப் பாராட்டு!
இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தும் வகையில்
மைய அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும்!

தொல்.திருமாவளவன் அறிக்கை


மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்குத் தடை செய்தல் மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தை தமிழக அரசு வரும் மார்ச் 15ஆம் நாள் முதல் நடைமுறைப்படுத்துவதாக அறிவிப்புச் செய்துள்ளது.  தமிழக அரசின் இந்த அறிவிப்பை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்றுப் பாராட்டுகிறது. 

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத இந்த அவலம் இந்தியாவில் நீடித்து வருவது சர்வதேச அரங்கில் இந்திய அரசுக்குப் பெரும் தலைகுனிவாகும். உயர் தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளிலும் வெகுவாக வளர்ச்சியடைந்துள்ள நிலையிலும், மனிதக் கழிவுகளை அகற்றுவதில் உயர்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு இந்திய அரசு அக்கறை காட்டாதது வேதனைக்குரியதாகும்.  தனிநபர் இல்லங்களில் இத்தகைய நடைமுறை நீடிப்பது ஒருபுறமிருந்தாலும், இந்திய இரயில்வே துறையில் இந்தப் போக்கு நீடிப்பது அவமானத்துக்குரியதாகும்.  அரசின் புள்ளிவிவரப்படி சுமார் 3 இலட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இரயில்வே துறையில் எத்தனையோ உயர்தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்தும் இந்திய அரசு மனிதக் கழிவுகளை அகற்றுவதில் அக்கறை செலுத்தாதது ஏன் என்று விளங்கவில்லை. இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நாடாளுமன்றத்தில் பலமுறை வலுவாகக் குரல் எழுப்பப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் உரையில் இதற்கென தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனக் குறிப்பிடப்படுவதோடு மட்டும் சரி. மேற்கொண்டு அரசு அதை நடைமுறைப்படுத்துவதற்காக எந்தச் செயல்திட்டங்களையும் அறிவிப்பது இல்லை. இரயில்வே துறையின் நிதி அறிக்கையின் மீதான விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் இது குறித்து கேள்வி எழுப்பிய நிலையிலும் அமைச்சர் உரிய விடையளிக்கவில்லை. அதனைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் அப்போது நாடாளுமன்றத்தில் வெளிநடப்புச் செய்தது.  

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் இந்த இழிவை ஒழிப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து குரல்கொடுத்துவரும் நிலையில், தமிழக அரசு இது தொடர்பாக சட்டம் ஒன்றை நடைமுறைக்குக் கொண்டுவருவது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது.  தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் மனிதக் கழிவுகளை அப்புறப்படுத்தும் மக்களை இந்த அவலத்திலிருந்து மீட்பதற்கேற்ற வகையில் இந்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான வகையில் நிலம் கையப்படுத்துவதற்கான அவசரச் சட்டத்தை இயற்றும் இந்திய அரசு மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலத்தை ஒழிப்பதற்கு சட்டம் இயற்ற முன்வராதது மிகுந்த வேதனையளிக்கிறது.  மேலும், ‘தூய்மை இந்தியா’ எனும் பெயரில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் ஆர்வம் காட்டும் இந்திய அரசு கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பற்றிக் கவலைப்படாதது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.  மலக் குழியில் அன்றாடம் மூழ்கி எழும் மனிதனின் வாழ்வைப் பார்த்த பிறகும் அவன் மீது கருணை காட்டுவதற்கு நெஞ்சில் ஈரமில்லாப் போக்கினையே வெளிப்படுத்துகிறது.  அவனையும் மீட்பதிலிருந்துதானே தூய்மை இந்தியாவை முழுமை செய்ய முடியும்.  இல்லையேல் அது வெறும் விளம்பரத் திட்டமாகவே இருக்கும்.  

எனவே, இந்திய அரசு தமிழக அரசைப் பின்பற்றி, மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்தைத் தடைசெய்ய இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கான சட்டம் ஒன்றை இயற்ற வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. அத்துடன், தமிழக அரசு இத்திட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதற்கு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

இவண்

தொல்.திருமாவளவன்