மதவெறியர்களின் கொட்டத்தை அடக்கத் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்!

புதிய தலைமுறை தொலைக்காட்சிமீது வெடிகுண்டுத் தாக்குதல்!
மதவெறியர்களின் கொட்டத்தை அடக்கத் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்!

தொல்.திருமாவளவன் அறிக்கை

 
கடந்த சில நாட்களாக புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எதிராக மதவெறி சக்திகள் தொடுத்துவரும் தாக்குதல்களின் உச்சகட்டமாக இன்று அதிகாலை வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்பதன் அடையாளம் மட்டுமல்லாது மதவாத சக்திகள் எந்த அளவுக்கு இங்கே ஊக்கம் பெற்றிருக்கின்றனர் என்பதன் அடையாளமும் ஆகும். 

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடக்கவிருந்த ஒரு விவாத நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதன் ஊழியர்களைத் தாக்கினார்கள்; கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்களுக்கு தொலைபேசியில் ஆயிரக் கணக்கான ஆபாச மிரட்டல்கள் வந்தன. அவற்றில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இப்போது இந்த அளவுக்கு நடந்திருக்காது. 

புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது தொடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல் கருத்துரிமை மீதான தாக்குதல், ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல், மதவெறியை எதிர்க்கும் ஒவ்வொருவருக்கும் விடப்பட்டிருக்கும் எச்சரிக்கை.  இப்போதே கடுமையான நடவடிக்கைகளை எடுத்து இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் மதவெறியர்கள் தமிழ்நாட்டை வன்முறைக் காடாக மார்றிவிடுவார்கள். 

புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலத்தின் மீது குண்டு வீசியவர்களைக் கைது செய்வதோடு மதவாத வன்முறை சக்திகளைக் கட்டுப்படுத்தத் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.


இவண்
தொல்.திருமாவளவன்