மார்ச் 16 - தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாளாக விரிவுபடுத்த வேண்டும்!
நிலம் கையகப்படுத்தும் மக்கள் விரோத அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்!
மார்ச் 16 - தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் 
விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

தொல்.திருமாவளவன் அறிக்கை கடந்த ஆட்சியின்போது நடைமுறையிலிருந்த மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கிராமப்புற உழைக்கும் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. வருடத்தில் நூறு நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டு வரும் இத்திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தாலும் அது ஒரு பயனுள்ள திட்டமாகவே விளங்கியது. தற்போது பாரதிய சனதா ஆட்சியில் அத்திட்டத்தை படிப்படியாக முடக்கும் சதிமுயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது. அத்திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதி அகில இந்திய அளவில் பெருவாரியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இத்திட்டத்தின்கீழ் வேலை நடக்கும் பரப்பளவும் வெகுவாகக் குறைந்துள்ளது. தமிழகத்திலுள்ள 385 ஒன்றியங்களிலும் நடைபெற்ற இவ்வேலைகள் சுமார் 94 ஒன்றியங்களில் மட்டுமே நடைபெறுவதாகத் தெரிகிறது. இது எளிய மக்களுக்கெதிரான மாபெரும் மோசடியாகும். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டமென்பதாலும், மகாத்மா காந்தியின் பெயரால் இத்திட்டம் அமைந்திருப்பதாலும் அரசியல் காழ்ப்புணர்வுடன் மெல்லமெல்ல இதனை முடக்கிவிட பா.ச.க. அரசு சதி முயற்சியில் ஈடுபடுவதாகவும் தெரிகிறது. இத்திட்டத்தை முடக்கும் முயற்சியைக் கைவிட்டு, நூறு நாள் வேலைத்திட்டமென்பதை ‘இருநூறு நாள் வேலைத் திட்ட’மாக விரிவுபடுத்த வேண்டுமென்றும், ஊதியத்தை நாளொன்றுக்கு 200 ரூபாயாக உயர்த்த வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

மேலும், அண்மையில் இந்திய அரசு நிலம் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டமொன்றைக் கொண்டு வந்தது. அந்த அவசரச் சட்டத்தை நாடாளுமன்ற அவைகளில் நிறைவேற்றுவதற்கு தற்போது முயற்சித்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் தேவைகளுக்கேற்ப விளைநிலங்களையும், குடியிருப்பதற்கான நிலங்களையும் கையகப்படுத்துவதற்கு ஏதுவாக இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால், சிறு, குறு விவசாயிகளும், விவசாய நிலங்களை நம்பி வாழும் விவசாயக் கூலித் தொழிலாளிகளும் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மைய அரசின் எதேச்சதிகாரப் போக்கிற்கு இந்த நடவடிக்கை ஒரு சான்றாக அமைந்துள்ளது. அத்துடன், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், ஏழை-எளிய மக்களுக்கு எதிராகவும் இயங்குகிற ஓர் அரசு என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது.  எளிய மக்களுக்கு எதிரான மோடி அரசின் இத்தகைய போக்குகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன், உழைக்கும் மக்களுக்கு எதிரான இந்த அவசரச் சட்டத்தை நாடாளுமன்ற அவைகளில் நிறைவேற்றுவதற்கு முயற்சிக்காமல் அதனை உடனடியாக திரும்பபெற வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

நூறு நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் இந்திய அரசின் சதி முயற்சியைக் கண்டிக்கிற வகையிலும், அத்திட்டத்தை இருநூறு நாள் திட்டமாக விரிவுபடுத்த வேண்டுமென்று வலியுறுத்துகிற வகையிலும், மக்களுக்கு விரோதமான முறையில் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்று இந்திய அரசை வலியுறுத்துகிற வகையிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகரங்களில் எதிர்வரும் மார்ச் 16 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  சென்னையில் எனது (தொல்.திருமாவளவன்) தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவண்
தொல்.திருமாவளவன்