பிரதமர் இலங்கைக்குச் செல்வதற்குமுன் தமிழக முதல்வருடன் கலந்தாலோசிக்க வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை குறித்த அறிக்கை தள்ளி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழர்களின் நம்பிக்கை குறைந்துபோயுள்ளது. இராஜபக்சேவுக்கு ஆதரவாக சிங்களக் கடும் போக்காளர்கள் பேரணியை நடத்தி மீண்டும் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளனர். 

நடைபெறவிருக்கும் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவது என்ற ஒற்றை நோக்கத்தோடு இப்போதைய இலங்கை அரசாங்கம் காய்களை நகர்த்தி வருகிறது. தமிழர்களைப் பற்றி  அதிபர் மைத்ரிபாலாவும் கவலைப்படவில்லை. 

இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும், தம்மிடமிருந்து இராணுவம் பறித்துக்கொண்ட நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என ஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.  ஆனால் அதற்கு மைத்ரிபாலா அரசாங்கம் எவ்வித மறுமொழியும் கூறவில்லை. போரின் இறுதி நாட்களில் விசுவமடு பகுதியில் முப்பத்தைந்தாயிரம் தமிழர்களின் உடல்கள் கிடந்ததாகப் பிணக்கூறு சோதனைகள் நடத்தியவர்கள் சொன்னார்கள் என மன்னார் ஆயர் இப்போது கூறியிருப்பது இனப்படுகொலைக்குச் சான்றாக இருக்கிறது. 

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது இப்போதும் தொடர்கிறது. இரு நாட்டு மீனவர்களும் தடையின்றி மீன் பிடிப்பது தொடர்பாக இந்திய அரசு முன்வைத்த ஆலோசனையையும் இலங்கை அரசு நிராகரித்திருக்கிறது. மார்ச் மாதம் 5ஆம் தேதி இரு நாட்டு மீனவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த இருந்ததையும் இப்போது இலங்கை அரசு ஒருதலைப்பட்சமாக இரத்து செய்துவிட்டது. 

இராஜபக்சே சீனச் சார்பாளர்; மைத்ரிபாலா அப்படியானவர் அல்ல எனக் கூறப்பட்டது. ஆனால் சீனாவுடன் போட்ட ஒப்பந்தங்களை இரத்து செய்ய முடியாது என இப்போது இலங்கை அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். 

ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனையிலும், தமிழக மீனவர்கள் பிரச்சனையிலும் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இந்தியப் பிரதமர் இலங்கைக்குச் செல்வது இந்தியாவைப் பலவீனமாகக் காட்டும் என்பது மட்டுமின்றி இலங்கை இனவெறி அரசுக்கு ஒப்புதலாகவும் அமைந்துவிடும். எனவே இந்தியப் பிரதமர் இலங்கைக்குப் போவதற்கு முன்னர்:

* இலங்கை இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்! 

* இலங்கை இராணுவத்தால் பறிக்கப்பட்ட ஈழத் தமிழரின் நிலங்கள் மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும்!

* தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க நிரந்தரத் தீர்வு எட்டப்படவேண்டும்!

இந்தப் பிரச்சனைகள் குறித்து இலங்கைக்குப் போவதற்குமுன் இந்தியப் பிரதமர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் கருத்துகளை அறியும்வகையில் தமிழக முதல்வரோடு கலந்தாலோசிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. 

தமிழக முதல்வர் இதற்கென அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி ஈழத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.


இவண்

தொல்.திருமாவளவன்