இரயில்வே பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது! தொல்.திருமாவளவன் அறிக்கை


திரு. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் முதல் ரயில்வே பட்ஜெட் என்பதால் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது.  அவற்றைத் தகர்க்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது. புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு எதையும் இந்த பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சர் வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது. 

ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை எனச் சொல்லப்பட்டாலும் அதில் மகிழ்ச்சியடைய ஒன்றுமில்லை.  ஏனென்றால் பாஜக அரசு கட்டணங்களை நினைத்த நேரத்தில் உயர்த்தி வருகிறது. பட்ஜெட்டில் இல்லாவிட்டாலும் இன்னும் சில மாதங்களில் கட்டண உயர்வு வரக்கூடும். 

அண்மைக்காலமாக அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் பொருள் இழப்புகளும் உண்டாகின்றன. எனவே ரயில்களின் பாதுகாப்பு குறித்து அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே பெண் பயணிகளின் பதுகாப்புக்காக பெண்கள் பயணம் செய்யும் பெட்டிகள் அனைத்திலும் 'சிசிடிவி காமிரா' பொருத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவை குறித்து பாராட்டும்படியான அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இல்லை. 

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களின் தூய்மை குறித்து அமைச்சர் ஆர்ப்பாட்டத்தோடு பேசினார். ஆனால் அறிவிப்பில் எதுவுமில்லை. கையினால் மலம் அள்ளுவதை ஒழித்து சட்டம் இயற்றப்பட்டாலும் அதைச் சரியாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருப்பதற்கு ரயில்வே துறைதான் காரணம். ரயில்களில் 'பயோ டாய்லெட்'டுகளை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டாலும் தொடர்ந்து ஆட்சியாளர்கள் அதை அலட்சியப்படுத்தியே வருகிறார்கள். தூய்மை இந்தியா திட்டத்தை ரயில்வே துறையிலும் செயல்படுத்துவோம் என அமைச்சர் கூறினார். அனைத்து ரயில்களிலும் 'பயோ டாய்லெட்'டுகளை அமைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். 

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட புதிய ரயில்களும் இந்த ஆட்சியில் நடைமுறைக்கு வரவில்லை. ஒப்பீட்டளவில் ரயில்வே துறையின் வளர்ச்சி தமிழ்நாட்டில் மிகவும் குறைவு. எனவே புதிய ரயில்கள், ரயில் பாதைகள் தமிழ்நாட்டுக்குக் கூடுதலாக வழங்கப்படவேண்டும். அப்படி எந்தவொரு அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை. மொத்தத்தில் இது தமிழ்நாட்டுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட். 


இவண்

தொல்.திருமாவளவன்