மத்திய நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டுக்கு அநீதி! - மோடி அரசுக்கு தொல்.திருமாவளவன் கண்டனம்

மத்திய நிதிக் குழுவைக்  கலைத்துவிட்டு ‘நிதி ஆயோக்’ என்ற புதிய அமைப்பை மோடி அரசு உருவாக்கியபோதே மாநில உரிமைகள் பாதிக்கப்படலாம் என்ற ஐயம் எழுந்தது.  இப்போது அது உண்மையாகியிருக்கிறது. மத்திய அரசின் வரி வருவாய் நிதிப் பகிர்வில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டிருப்பது இப்போது தெரியவந்துள்ளது.

2015-2020 ஆண்டுகளுக்கான 14ஆம் திட்டக்குழு அறிக்கை இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது.   மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை 32 விழுக்காட்டிலிருந்து 42 விழுக்காடாக உயர்த்தியிருப்பதாகவும் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்துவதே தமது நோக்கமென்றும் மத்தியில் ஆட்சி செய்பவர்கள் வாய்ப்பந்தல் போட்டுவந்தனர்.  ஆனால் அவர்களது பேச்சுக்கு மாறாக தமிழ்நாடு, பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களின் பங்கு 13ஆம் திட்டக் காலத்தில் இருந்ததைவிட இப்போது குறைக்கப்பட்டிருக்கிறது. 

13ஆம் திட்டக் காலத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய வரி வருவாயில் 4.969 விழுக்காடு பகிர்ந்தளிக்கப்பட்டது. அது இப்போது 4.023 விழுக்காடாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ ஒரு விழுக்காடு குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது 2014-15ஆம் ஆண்டில் சுமார் மூவாயிரம் கோடி ரூபாயும் 2015-16க்கு சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாயும் தமிழ்நாட்டின் பங்கில் குறைக்கப்பட்டிருக்கிறது.  இதனால் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பல்வேறு சமூக நலத் திட்டங்களும் பாதிப்புக்குள்ளாகும்.

ஒரு மாநிலத்துக்கு மத்திய வரி வருவாயைப் பகிர்ந்தளிப்பதற்கென பல்வேறு தகுதிக் கூறுகளை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது.  மக்கள் தொகை, அதில் ஏற்படும் மாற்றங்கள், வருமானம், பரப்பளவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இதுவரை மாநிலங்களுக்கு மத்திய வரி வருவாய் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது. இந்தமுறை ஒரு மாநிலத்தில் இருக்கும் வனப்பகுதியின் பரப்பளவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அதற்கு ஏழரை விழுக்காடு மதிப்பெண் தரப்பட்டிருக்கிறது. வனப்பகுதியின் பரப்பளவு குறைவாக இருக்கிறது என்ற காரணத்தைச் சொல்லியே இப்போது தமிழ்நாட்டுக்கான நிதி குறைக்கப்பட்டிருக்கிறது.

வரி வருவாய்ப் பகிர்வில் நிதி குறைக்கப்பட்டிருப்பவை பெரும்பாலும் பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களாகும்.  இந்த ஓரவஞ்சனையை நாம் ஒருபோதும் ஏற்கமுடியாது.  தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்டிருக்கும் இந்த அநீதியை உடனடியாக மத்திய அரசு சரிசெய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டுக்கு சிறப்புத் தகுதி அளித்து கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். 

இவண்
தொல்.திருமாவளவன்