நிலம் கையகப்படுத்துதல் திருத்த மசோதாவைக் கைவிடுக! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்மோடி தலைமையிலான பாஜக அரசு, தான் பிறப்பித்திருக்கும் நிலம் கையகப்படுத்துதல் திருத்த அவசர சட்டம் காலாவதியாகவிருக்கும் நிலையில் இப்போது அதற்கான மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நாடெங்கும் அதற்கு எதிர்ப்பு எழுந்துள்ள போதிலும்  கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சேவை செய்யும் நோக்கில் இந்த மசோதாவைச் சட்டமாக்க மோடி அரசு துடிக்கிறது.  மோடி அரசின் இந்த நடவடிக்கை நிலத்தை நம்பி வாழும் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போடுவதாக இருக்கிறது.

இதற்கு முன்பிருந்த காங்கிரஸ் அரசு செய்த நன்மைகளில் ' நிலம் கையகப்படுத்துதல் சட்டம் ' ஒன்றாகும்.  அதற்குமுன் இருந்த சட்டத்தில் இருந்த குறைகளைக் களைந்து காங்கிரஸ் அரசு அந்த சட்டத்தைக் கொண்டுவந்தது. ஒரு நிலத்தை அரசாங்கம் விருப்பம்போல் கையகப்படுத்துவதை அந்தச் சட்டம் தடுத்தது.  நிலத்தைக் கையகப்படுத்தவேண்டுமெனில் நில உரிமையாளர்களில் 80% பேர் ஒப்புதல் அளிக்கவேண்டும்.  அதனால் ஏற்படும் சமூகப் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். பயன்படுத்தாத நிலங்களை உரிமையாளர்களுக்கு மீண்டும் ஒப்படைக்கவேண்டும் என்பவை உள்ளிட்ட பல நிபந்தனைகள் அந்தச் சட்டத்தில் உள்ளன. தற்போதைய பாஜக அரசு அவை எல்லாவற்றையும் நீக்கிவிட்டு தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்திருக்கிறது. இது அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கையாகும். 

பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஆதரவாக தற்போதிருக்கும் சட்டங்களைத் திருத்துவதில் மோடி அரசாங்கம் முனைப்போடு உள்ளது.  தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களிலும் அப்படித்தான் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் விவசாயிகளின் நண்பனைப்போல நாடகமாடியவர் நரேந்திர மோடி அவர்கள்.  ஆனால் அவர் உண்மையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பாவையாகச் செயல்படுகிறார் என்பது இப்போது அம்பலமாகிவிட்டது.  விவசாயிகளின் வாழ்வை நாசமாக்கி கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப வேட்டைக்கு இந்தியாவைத் திறந்துவிடும் இந்த 'தேச விரோத' சட்ட மசோதாவை மோடி அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.  இந்தச் சட்ட மசோதாவை எதிர்த்துப் போராட முன்வருமாறு தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறைகூவி அழைக்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்