நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஏழைகளுக்கும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்!

நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஏழைகளுக்கும் 
ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்! 
தொல்.திருமாவளவன் கருத்து

பாஜக அரசு தாக்கல் செய்திருக்கும் முழுமையான முதல் பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஏழை மக்களுக்கும் மிகப் பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ஐந்து லட்சமாக உயர்த்தப்படும் எனத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்த பாஜக, இந்த பட்ஜெட்டில் ஒரு ரூபாயைக்கூட உயர்த்தாதது வாக்களித்த மக்களுக்குச் செய்திருக்கும் மிகப் பெரிய துரோகமாகும். அதே நேரத்தில் சொத்து வரியை ரத்துசெய்து இந்த அரசு பணக்காரர்களுக்கு உதவியிருக்கிறது.  

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் எல்லோரையும் மருத்துவக் காப்பீடு செய்துகொள்ளும்படி இந்த பட்ஜெட் வலியுறுத்தியிருக்கிறது. அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதியை உத்தரவாதப்படுத்தும் கடமையிலிருந்து பாஜக அரசு தப்பித்துக்கொள்ள முயற்சிப்பதன் அடையாளம்தான் இது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.  

எஸ்சி பிரிவினருக்கு 30,851 கோடி ரூபாயும், எஸ்டி பிரிவினருக்கு 19,980 கோடி ரூபாயும் ஒதுக்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் தாழ்த்தப்பட்டோர் துணைத் திட்டம் (எஸ்.சி.எஸ்.பி), பழங்குடியினர் துணைத் திட்டம் (டி.எஸ்.பி) ஆகியவற்றின்கீழ் அவர்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது எனத் தெளிவுபடுத்தப்படவில்லை.
எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்படும் மிகக் குறைந்த தொகையும்கூட அவர்களுக்கான திட்டங்களுக்குச் செலவிடப்படாமல் வேறு திட்டங்களுக்குத் திசைதிருப்பி விடப்படுகின்றன. அதைத் தடுப்பதற்கு கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் இருப்பதுபோல தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டும் என நீண்டகாலமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தலித் இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதுபற்றி எந்தவொரு அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை. 

பட்ஜெட் தொகையில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு இணையான தொகையை ஒதுக்கீடு செய்வதைத் தவிர்த்துவிட்டு, சிறு தொழில்முனைவோருக்காக ‘முத்ரா’ வங்கி தொடங்கப்படும். அதில் எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த தொழில் முனைவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பதை வெறும் கண்துடைப்பு என்றே கருதவேண்டி உள்ளது. 

நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்கப்போவதாக நிதி அமைச்சர் கூறியிருப்பது தனியார்மயத்தைப் பொறுத்தவரை கடந்த காங்கிரஸ் அரசின் பாதையைத்தான் பாஜகவும் பின்பற்றுகிறது என்பதற்குச் சான்றாக இருக்கிறது. 

’ஒருங்கிணைந்த தேசிய வேளாண் சந்தையை’ உருவாக்கப்போவதாக பட்ஜெட்டில் கூறியிருக்கிறார்கள். அது பொருளாதார ஆய்வறிக்கையில் சொல்லப்பட்ட ஆலோசனையாகும். கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்குதடையின்றி விவசாயத் துறையில் சுரண்டுவதற்கு ஏற்ப தேசிய வேளாண் சந்தையை உருவாக்க வேண்டும்; அதற்கு மாநிலங்கள் உடன்படவில்லையெனில் மாநில அதிகாரத்தைப் பறிக்கும்வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மாநிலப் பட்டியலையும், பொதுப் பட்டியலையும் திருத்த வேண்டும் எனவும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது.  எனவே இந்த அறிவிப்பு வேளாண் துறைக்கு மட்டுமின்றி உணவுப் பாதுகாப்புக்கும்  வேட்டுவைக்கும் ஆபத்தான  அறிவிப்பாகும்.
ஒட்டுமொத்தத்தில் இந்த பட்ஜெட் பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஆதரவானது. நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஏழை மக்களுக்கும் ஏமாற்றமளிப்பது. 

இவண்

தொல்.திருமாவளவன்