ஆணவக்கொலைகளைத் தடுக்கசிறப்புசட்டம் தேவை! தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன்வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் நாள்தோறும் அதிகரித்துவருகின்றன. வட இந்தியாவில் மட்டுமே இருப்பதாக கருதப்பட்ட சாதி பஞ்சாயத்து முறையும் ஆணவக் கொலைகளும் தமிழ்நாட்டில் இப்போது தலைவிரித்தாடுகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளே நடக்கவில்லை என தமிழக முதலமைச்சர் நேற்று சட்டமன்றத்தில் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

தேசியகுற்ற ஆவண அமைப்பு (என்.சி.ஆர்.பி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2013ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா முழுவதும் தலித் மக்களுக்கு எதிராக 46,201 வன்முறை சம்பவங்கள் நடந்ததாக என்.சி.ஆர்.பி. அறிக்கையில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், பீஹார் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு குறிப்பிடப்பட்டிருக்கிறது. தலித் மக்களுக்கு எதிராக இந்திய அளவில் நடந்த தாக்குதல்களில் 16.4% தாக்குதல்கள் தமிழ்நாட்டில் நடந்திருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

2013 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 42 ஆணவக்கொலைகள் நடந்திருப்பதாக ‘எவிடன்ஸ்’ என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் உசிலம்பட்டியில் நடைபெற்ற ஆணவக் கொலை தொடர்பான விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருப்பதையும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு சுட்டிக்காட்டுகிறோம். 


தமிழ்நாட்டில் பெருகிவரும் ஆணவக் கொலைகளுக்கும் கடந்த சில ஆண்டுகளாக சில சாதி அமைப்புகள் மேற்கொண்டுவரும் வெளிப்படையான வெறுப்புப் பிரச்சாரத்துக்கும் நேரடியான தொடர்பு இருப்பதை தமிழக முதல்வர் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால்தான் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் குறையும்.

டெல்லியில் நிர்பயா சம்பவத்தையொட்டி மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா குழு சமர்ப்பித்த அறிக்கையிலும் ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் இயற்றவேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. வன்கொடுமைத் தடுப்பு திருத்த மசோதா தற்போதைய பாஜக அரசால் கிடப்பில் போடப்பட்டிருக்கும் நிலையில் ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த சிறப்புசட்டம் இயற்றுவது மிகவும் அவசியமாகும்.  அந்த சட்டத்தை இயற்றும் அதிகாரம் மாநிலத்துக்கு இருக்கிறது.

தலித் மக்கள் மீது பெருகிவரும் தாக்குதல்களைத் தடுத்துநிறுத்திட, ஆணவக் கொலைகளைத் தடுத்திட சிறப்புசட்டம் ஒன்றை இயற்றி இந்தியாவுக்கே தமிழகம் முன்னுதாரணமாகத் திகழ தமிழக முதல்வர் முன்வரவேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். 

இவண்
தொல்.திருமாவளவன்