சிறுபான்மைச் சமூகத்தைக் கொச்சைப்படுத்தும் மதவெறிக் கும்பலைச் சிறைப்படுத்து!

ஈரோட்டில் வன்முறையைத் தூண்டும் சுவரொட்டி
சிறுபான்மைச் சமூகத்தைக் கொச்சைப்படுத்தும் 
மதவெறிக் கும்பலைச் சிறைப்படுத்து!

தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்


இந்து முன்னனி எனும் பெயரில் ஈரோடு மாவட்டத்தில் இசுலாமியச் சமூகத்தைச்  சார்ந்த பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். மேலும் தொடர்புக்கு தங்களது தொலைபேசி எண்களையும் அச்சுவரொட்டியில் அச்சிட்டுள்ளனர்.

குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களைப் போல தமிழகத்தையும் மதவெறியர்களின் வன்முறைக் களமாக்கிட முயற்சித்து வருகின்றனர் என்பதற்கு இச்சுவரொட்டி ஒரு சான்றாக விளங்குகிறது.

இசுலாமியர்கள் மட்டுமின்றி, மனசாட்சியுள்ள எவராலும் மதவெறியர்களின் இந்த அருவெருப்பான இழிசெயலைச் சகித்துக்கொள்ள முடியாது.
இசுலாமிய சமூகத்தைக் கொச்சைப்படுத்தும், சீண்டி வம்புக்கிழுக்கும் இந்துத்துவ மதவெறியர்களின் இந்த அநாகரிகத்தை விடுதலைச்சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்தச் சுவரொட்டியை அச்சிட்டவர்கள் மீதும் வெளியிட்டவர்களின் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.

முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடை தர்கா மீது தாக்குதல், நாகர்கோவில் அருகே கோட்டாறு முஸ்லீம் குடியிருப்புகளின் மீது தாக்குதல், உத்திரமேரூர் அருகே கனியாம்பேடு பள்ளிவாசல் எரிப்பு என இசுலாமியச் சமூகத்தைக் குறிவைத்து இந்துத்துவ மதவெறியர்களின் வன்முறை வெறியாட்டங்கள் தொடரும் சூழலில் ஈரோடு மாவட்டத்தில் இந்து முன்னணியின் பெயரால் வெளியாகியுள்ள இந்தச் சுவரொட்டியால் தமிழகமெங்கும் ஒரு கொந்தளிப்பான சூழல் எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு மெத்தனம் காட்டாமல் மதவெறியர்களின் இத்தகைய மக்கள் விரோதப் போக்கைத் தடுக்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.


இவண்

தொல்.திருமாவளவன்