தமிழர்கள் யாவரும் ஒருங்கிணைந்து போராட தமிழர் திருநாளில் உறுதியேற்போம்!

கொடுங்கோலன் இராஜபக்சேவின் வீழ்ச்சியைக் கொண்டாடுகிறோம்!
ஈழத் தமிழர்களுக்கு நிலையான அரசியல் தீர்வு கிடைத்திட
தமிழர்கள் யாவரும் ஒருங்கிணைந்து போராட தமிழர் திருநாளில் உறுதியேற்போம்!

தொல்.திருமாவளவன் பொங்கல் வாழ்த்து!தமிழினத்தின் பாரம்பரியமான பொங்கல் திருநாள் உழைப்பைப் போற்றும் உன்னத நாளாகும். குறிப்பாக, பசிப் பிணி நீக்கும் பயிர்த் தொழிலைச் செய்யும் உழவர்களின் உழைப்பையும், உழவுக்குத் துணை செய்யும் எருதுகளின் உழைப்பையும் போற்றி வணங்கும் பெருவிழாவாகும்.   அத்துடன், மானுட வாழ்விற்கு மூலாதாரமாய் விளங்குகிற கதிரவனுக்கும் பொங்கலிட்டு நன்றி செலுத்தும் புனித நாளாகும்.  தமிழினம் தலைமுறை தலைமுறையாய்க் கொண்டாடிவரும் தமிழர்க்கு உரிய ஒரே விழா இவ்விழாவேயாகும்.  இந்த நன்னாளில் உலகெங்கும் வாழ்கிற ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகள் உவகை பொங்கிட உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

முள்ளிவாய்க்கால் துயரத்தைத் தொடர்ந்து பொங்கல் கொண்டாட்டத்தைத் தவிர்த்துவந்த விடுதலைச் சிறுத்தைகள், இந்த ஆண்டு கொடுங்கோலன் இராஜபக்சேவின் வீழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் மகிழ்ச்சி பொங்கிடும் வகையில் நாடு தழுவிய அளவில் கொண்டாடுகிறோம்.  

ஈழத் தமிழர்களுக்கு நிலையான அரசியல் தீர்வு கிடைத்திட, பாதுகாப்பான மறுவாழ்வு கிடைத்திட உலகத் தமிழர்கள் யாவரும் ஒருங்கிணைந்து சனநாயக மாண்புகளைப் பின்பற்றி அறவழியில் தொடர்ந்து போராட இந்த தமிழர் திருநாளில் உறுதியேற்போம்!  உலகத் தமிழர்கள் யாவருக்கும் மீண்டும் எமது இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


இவண்

தொல்.திருமாவளவன்