சாக்சி மகாராஜின் வகுப்புவாதப் பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்!

சாக்சி மகாராஜின் வகுப்புவாதப் பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்!
பிரதமர் மோடி மௌனம் கலைத்து வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும்!
தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

பாரதிய சனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்த அரி என்கிற சாக்சி மகாராஜ் அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டிவிடுகிற வகையிலும் வெறுப்புணர்வை உருவாக்கும் வகையிலும் பேசியிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.  உத்திரப்பிரதேச மாநிலம், மீரட் நகரில் துறவிகள் கூட்டமொன்றில் அவர் பேசுகையில் ‘நான்கு மனைவிகளைக் கட்டிக்கொண்டு நாற்பது குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் கலாச்சாரம் இந்தியாவில் சரிப்பட்டுவராது; ஆகவே, இந்துப் பெண்கள் அனைவரும் குறைந்தபட்சம் நான்கு குழந்தைகளையாவது, இந்துமதத்தைக் காப்பாற்றப் பெற்றுக்கொள்ள வேண்டும். பசு வதைத் தடைச்சட்டம், மதமாற்றத் தடைச் சட்டம் ஆகிய சட்டங்களை விரைவில் மைய அரசு நிறைவேற்ற உள்ளது. அதன்பிறகு எவராவது பசுவதையில் ஈடுபட்டலோ, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டாலோ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.  உலகில் எந்தச் சக்தியாலும் அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதைத் தடுக்க முடியாது’ என்று பேசியதாகப் பத்திரிகைச் செய்திகளின் மூலம் தெரிய வருகிறது. 

அவருடைய பேச்சு வகுப்புவாத உணர்வைத் தூண்டிவிடுவதாகவும், வெறுப்பையும் பதற்றத்தையும் உருவாக்குவதாகவும் உள்ளது.  அவர் கொலை உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டுச் சிறை சென்றுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை தவறாகப் பயன்படுத்தியதற்காக மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர் என்றும் தெரிய வருகிறது. நான்காவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவர், அதற்கான மாண்பையும் கண்ணியத்தையும் மறந்துவிட்டு அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், மதச்சார்பின்மைக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவும் உள்ள அவரது நஞ்சு பேச்சை பாசக - ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டமிட்ட செயல்பாடுகளின் வெளிப்பாடாகத்தான் கருத முடிகிறது. கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம், சமஸ்கிருதத்தை பள்ளிகளில் கட்டாயமாக்கல், அரசுத்துறையின் சமூக இணைதளங்களில் இந்தி, கிறிஸ்மஸ் விடுமுறை நாளில் அலுவலகங்கள் செயல்படல், நாட்டின் தேசத்தந்தையாகப் போற்றப்படுகிற காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேவுக்குச் சிலை எழுப்ப வேண்டும் போன்ற பல பிரச்சினைகளை பா.ச.க மற்றும் சங்பரிவார அமைப்பினர், மோடி அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து திட்டமிட்டுப் பேசியும் செயல்பட்டும் வருவது சிறுபான்மை மற்றும் தலித் மக்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் மோடி அவர்கள் இத்தகைய பிரச்சினைகள் குறித்து எந்தக் கருத்தையும் சொல்லாமல் மௌனம் காக்கிறார்.  

பா.ச.க தலைவர் அமீத்ஷா அவர்கள் சாக்சி மகாராஜ் பேச்சைக் கண்டிக்காமல் அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும் என்று கூறியிருக்கிறார். நாடு முழுவதும் மக்களிடையே பதற்றத்தை உருவாக்கும் இத்தகைய பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் பிரதமர் மோடி அவர்கள் நாடாளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் மௌனம் காப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.  ஆகவே, பிரதமர் மோடி அவர்கள் அவரது மௌனத்தைக் கலைத்துவிட்டு சாக்சி மகாராஜ் போன்றவர்களை வெளிப்படையாகக் கண்டிப்பதோடு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்றும், உத்திரப்பிரதேச அரசும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.


இவண்

தொல்.திருமாவளவன்