முத்துப்பேட்டை தர்கா மீது தாக்குதல்: தமிழகத்திலும் தலைவிரித்தாடும் மதவெறியாட்டம்!

முத்துப்பேட்டை தர்கா மீது தாக்குதல்:
தமிழகத்திலும் தலைவிரித்தாடும் மதவெறியாட்டம்!
தொல்.திருமாவளவன் கண்டனம்


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடை கிராமத்தில் ஒரு மதவாத வன்முறைக் கும்பல் இசுலாமியருக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. 

புத்தாண்டுக் கொண்டாட்டம் எனும் பெயரில் அங்கே திரண்ட அந்த வன்முறைக் கும்பல் இசுலாமியருக்குரிய தர்கா மீது கற்களை வீசியுள்ளனர். கண்ணாடிகள் மற்றும் விளக்குகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இசுலாமியப் பெண்களை மிகவும் அருவருக்கத்தக்க வசை மொழிகளால் ஏசியுள்ளனர்.

இந்து - முஸ்லீம் மக்களுக்கு இடையில் மோதலைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடத்துடிக்கும் இந்துத்துவ மதவெறிக் கும்பலின் இத்தகைய வன்முறைப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது.

நரேந்திர மோடி பிரதமர் ஆன பொழுதிலிருந்து இந்தியா முழுவதிலும் மதவெறிக்கும்பல் இசுலாமியர், கிறித்துவர், தலித் உள்ளிட்ட சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எதிராகப் பேசியும் செயல்பட்டும் வருகின்றனர். வட மாநிலங்களில் மட்டுமின்றி தற்போது தமிழகத்திலும் இந்தப் போக்கு வெகுவாகத் தலைதூக்கியுள்ளது. வெளிப்படையாக எச்சரிக்கை விடுவதும், சவால் விடுவதுமான நடவடிக்கைகளில் மதவாதக் கும்பல் ஈடுபட்டு வருகின்றது. இதனால் ஏதுமறியாத அப்பாவி இளைஞர்களும் சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகளில் துணிந்து ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

முத்துப்பேட்டையில் மட்டுமின்றி, நாகர்கோவில் பகுதியிலும் இசுலாமியிருக்கு எதிரான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே கனியாம்பேடு கிராமத்தில் பள்ளிவாசலைத் தீ வைத்து எரித்துள்ளனர்.  வடமாநிலங்களில் மதவெறியைத்தூண்டி அரசியல் ஆதாயம் தேடுவதைப்போல தமிழகத்திலும் அதே உத்தியைக் கையாளுவதற்கு மதவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அவர்களின் வன்முறைக் கூச்சல்களிலிருந்து அறிய முடிகிறது. எனவே தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டும் வகையில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

முத்துப்பேட்டை தர்கா மீது தாக்குதல் நடத்திய மதவெறிக் கும்பல் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சிறுபான்மைச் சமூகத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்