பகையை மறப்போம்; உரிமையைக் காப்போம்; திருமாவளவன் பேச்சு
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுப்பதைக் கண்டித்தும், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே இரண்டு அணைகள் கட்டுவதைக் கண்டித்தும், நூறு நாள் வேலைத்திட்டத்தை முடக்கியதைக் கண்டித்தும் நாகை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், மீத்தேன் எதிர்ப்பு கூட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.வரதராஜன், இயற்கை வேளாண் விவசாய சங்க தலைவர் நெல்.ஜெயராமன் உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்களும், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் பெரியார்.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இப்போராட்டத்தை வலுவடைய செய்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், மீத்தேன் திட்ட ஒப்பந்தம் ஜனவரி மாதம் 4ம் தேதியோடு காலாவதி ஆனாலும் அதைப் மத்திய, மாநில அரசுகள் புதுப்பிக்காமல் இருக்க மாட்டார்கள். காரணம், பன்னாட்டு நிறுவனங்களால் உருவாக்கி வார்க்கப்பட்டவர் தான் இந்திய பிரதமர் மோடி. அவர் நம் நாட்டு மக்களின் நலனை விட்ட பன்னாட்டு நிறுவனங்களின் நலன் மீது தான் அக்கறைக் காட்டுவார். 

காங்கிரஸ் ஆட்சி இலங்கை தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம் சுமத்தி மோடி அரசைக் கொண்டு வர நினைத்தார்கள். மோடி அரசு வந்ததுமே காங்கிரஸைப் போல் இலங்கை அரசுடன் உறுவுக்கொண்டாடி இருக்கிறது. ராஜபக்சேவை சிவப்பு கம்பளம் விரித்து, பூத்தூவி வரவேற்கிறது. 

காவரியின் குறுக்கே அணைக் கட்டுவதில் கர்நாடக அரசு முயற்சித்த போது காங்கிரஸ் அரசு எப்படித் தமிழகத்திற்கு துரோகம் புரிந்ததோ அதைத்தாண்டி தற்போது ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் செய்து வருகிறது. அதே போல் காங்கிரஸ் கொண்டு வந்த 100 நாள் வேலைத்திட்டத்தைக் காந்தியின் பெயரைக் கொண்டு இருப்பதால் எடுத்தார்களோ என்னவோ? ஆக, இந்தப் பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட வேண்டுமானால் வெகுஜன மக்களாகிய நாம் களத்தில் இறங்கி போராடியே ஆக வேண்டும்.

மக்களின் நலனுக்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் எந்தக் கட்சி முன் நின்று போராட்டங்களை நடத்தினாலும் அதற்கு எத்தனை உயிர் பலிபோனாலும் விடுதலை சிறுத்தைகள் கலந்து கொண்டு போராட்டத்தை வலுவடைய செய்ய வேண்டும். 

விவசாய மண்ணில் இருந்து நம்மை விரட்டி நினைக்கும் பன்னாட்டு நிறுவனங்களையும் அதற்கு உறுதுணையாக இருக்கும் ஆட்சியாளர்களையும் அடையாளம் காட்டி அப்புறப்படுத்த வேண்டிய கடமையை நம் தோளில்தான் சுமக்க வேண்டும். அதனால், எந்தக் கட்சி எதிர்த்தாலும் விவசாயிகளான நமது நலனுக்காக எதிரியாயிருந்தாலும் பகையை மறந்து போராட்டத்தில் கலந்து கொண்டு வலுவடைய செய்ய வேண்டும்." என்று பேசி முடித்தார். 

நன்றி : நக்கீரன்