இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது சாதியமே!

இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது சாதியமே!
உலக வங்கியின் தலைவரின் பேச்சை இந்தியர்கள் உணரவேண்டும்!

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் துணைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த 
மைய மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும்!

தொல்.திருமாவளவன் அறிக்கை

குஜராத் மாநிலம் காந்தி நகரில் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தொடங்கி வைத்த 7வது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் (வைப்ரன்ட் குஜராத்) பங்கேற்ற உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம், “முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கி, அபரிமிதமான வளர்ச்சியை எட்டுவதற்கான வழி வகைகளை மோடி தலைமையிலான அரசு செய்து வருகிறது” என்று  கூறினார்.  அத்துடன் அவரது  உரையில், நமது நாட்டிலுள்ள சாதிய பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மேலும் பல திட்டங்களைத் தீட்டவேண்டும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.  அத்துடன், இந்திய சமூகக் கட்டமைப்பில் சாதி அடிப்படையில் மக்கள் நெடுங்காலமாக விலக்கிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் வேலைவாய்ப்பு, பொதுப் பணிகள் உள்ளிட்ட பல துறைகளில் நாட்டின் வளமும் செழுமையும் பகிர்ந்தளிக்கப்படாமல் தாமதமாவதற்கு இத்தகைய சாதியப் பாகுபாடுகள்தான் அடிப்படையான காரணமாகும் என்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு அரசு சிறப்பு நிதி ஒதுக்கவேண்டுமென்றும் ஒதுக்கிய நிதி அவர்களுக்குச் சென்றடைவதில் உள்ள இடர்ப்பாடுகளை அரசு களைய வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

முதலீட்டாளர்களின் நலன், தொழில் வளர்ச்சி, அந்நிய முதலீடுகள் போன்ற பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளிகளின் நலம்தான் அம்மாநாட்டின் நோக்கமாகும்.  இருப்பினும் அம்மாநாட்டில், பிரதமர் நரேந்திரமோடி அவர்களோ, இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்களோ, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலன்கள் வளர்ச்சி குறித்து எவரும் பேசாதபோது, உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் கூறியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. இந்தியக் குடிமகனாக இருக்கும் ஒவ்வொரும் இதற்காக வெட்கப்பட வேண்டியதாகும். இந்தியாவில் தொழில்வளர்ச்சி மட்டுமின்றி எத்தகைய புரட்சிகர மாற்றத்தை உருவாக்குவதற்கும் சாதியம் முட்டுக்கட்டையாக உள்ளது என்பதை இந்தியர் அல்லாத ஒருவர், உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் அவர்களின் இந்தப் பேச்சு உணர்த்துவதாக உள்ளது.

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஆண்டுதோறும்  பட்டியலின துணைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அந்நிதி முழுமையாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்காகச் செலவிடப்படாமல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தவறான நடவடிக்கைகளால் மற்ற துறைகளுக்காகச் செலவிடப்படுகிறது.  இந்நிலையில், திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு ‘நித்தி அயோக்’ என்கிற புதிய அரசை மோடி அரசு உருவாக்கியுள்ளது. நித்தி அயோக் திட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் துணைத் திட்டம், பழங்குடியினர் துணைத்திட்டம் ஆகியவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதை மோடி அரசு விளக்க வேண்டுமெனவும் இத்திட்டங்களைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த  2012இல் ஆந்திர அரசு சட்டம் இயற்றியதைப்போல மைய மாநில அரசுகளும் சட்டம் இயற்றவேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

அத்துடன், மோடி அரசு ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தி தொழில் வளர்ச்சி, அந்நிய முதலீட்டாளர்கள் நலன் போன்றவற்றை மட்டும்தான் முக்கியமானதாகக் கருதுகிறது. ஆனால், உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ என்பதற்கு மாற்றாக இந்திய மக்கள் அனைவருக்காகவும் உருவாக்குவோம் என்கிற நோக்கத்துடன் மோடி அரசு திட்டங்களைத் தீட்டி செயல்படவேண்டுமென விடுதலைசிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. 

இவண்
தொல்.திருமாவளவன்