இயற்கையையும் அழிக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்!

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு
மலையைச் சிதைத்து மக்களின் வாழ்வாதாரத்தையும் 
இயற்கையையும் அழிக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்!
தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

தேனி மாவட்டம் போடி மலைப்பகுதியிலுள்ள பொட்டிபுரம் கிராமத்தில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்திற்கு, தமிழக மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையிலும் மைய அமைச்சரவை    ஒப்புதல் அளித்துள்ளதை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

 அசாம் மற்றும் கேரளா மாநிலங்களில் தொடங்குவதற்கு எதிர்ப்புக் கிளம்பியதால் கைவிடப்பட்ட இத்திட்டம், தமிழகத்தில் அணு சக்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் உதவியுடன் அமைக்கப்படவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்திற்காக மலை உச்சியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் சுமார் இரண்டு இலட்சம் கன சதுர மீட்டர் அளவில் சுரங்கம் வெட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தேனி மற்றும் அருகாமை மாவட்டங்களில் விவசாயமும் சுற்றுச்சூழலும் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே கூடங்குளம் அணுமின் நிலையம், மீத்தேன் எரிவாயுத் திட்டம், கெயில் குழாய் அமைக்கும் திட்டம் என தமிழகத்தைப் பேராபத்து சூழ்ந்துள்ள நிலையில் மைய அரசின் நியூட்ரினோ ஆய்வு மைய அறிவிப்பு மேலும் தமிழக மக்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. அத்துடன் அந்தச் சுரங்கம் அமையவுள்ள பகுதியில் அணுக்கழிவுகளைக் கொட்டுவதற்குப் பயன்படுத்துவார்கள் என்கிற அச்சமும்  மக்களிடையே இருக்கிறது.

உலகம் முழுதும் இயற்கை வளங்களை மீட்டெடுக்க அறிவியல் திரும்பிக் கொண்டிருக்கிற காலத்தில், போடியில் மலையைச் சிதைத்து, மக்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கையையும் அழிக்கும் நியூட்ரினோ ஆய்வு மையத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்றும் மைய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. 


இவண்

தொல்.திருமாவளவன்