மதவெறி ஃபாசிச சக்திகளின் நடவடிக்கைகளை எதிர்த்து அனைத்து சனநாயக சக்திகளின் கலந்தாய்வுக் கூட்டம்


தமிழகத்தில் பரவிவரும் மதவெறி ஃபாசிச சக்திகளின் நடவடிக்கைகளை எதிர்த்து அனைத்து சனநாயக சக்திகளின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (23-1-2015) மாலை 6 மணி அளவில் சென்னை, தியாகராயர் நகர், பெனின்சுலா விடுதியில் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெகலான்பாகவி ஆகியோர் இதற்கான ஒருங்கிணைப்பு முயற்சிகளை மேற்கொண்டனர்.  இக்கூட்டத்தில் சிபிஐ கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் ஆர்.நல்லக்கண்ணு, தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திரு. பீட்டர் அல்போன்ஸ், சிபிஎம் கட்சியின் சார்பில் தோழர் குணசேகரன், மதிமுக சார்பில் திரு. மல்லை சத்யா மற்றும் இசுலாமிய, கிறித்தவ அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். 

இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:

திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் பாரதிய சனதா கட்சியின் ஆட்சி அமைந்த நாளிலிருந்து, தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மதவெறி ஃபாசிச சக்திகளின் நடவடிக்கைகள் சமூக நல்லிணக்கத்திற்கும் நாட்டின் அமைதிக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.  'தர்வாப்சி' என்னும் பெயரில் சிறுபான்மையின மக்களைக் கட்டாயப்படுத்தி இந்துக்களாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதும், 'கோட்சேவுக்குச் சிலை எழுப்புவோம்! கோயில் கட்டவோம்!' என்று அறிவிப்பதும் போன்ற நடவடிக்கைகள் சமூக அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளன. அத்துடன், தமிழகத்தைக் குறி வைத்து அத்தகைய மதவெறி, ஃபாசிச சக்திகள் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளனர்.  
இந்நிலையில், மதச்சார்பின்மை, சமூகநீதி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றில் நம்பிக்கையுள்ள அனைத்து சனநாயகச் சக்திகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய வரலாற்றுத் தேவையை இக்கூட்டம் சுட்டிக்காட்டுகிறது.  கட்சி அரசியல், சாதி போன்ற வேறுபாடுகளைக் கடந்து மதவெறி ஃபாசிசத்தை எதிர்த்து அணிதிரள வேண்டுமென சனநாயக சக்திகள் யாவருக்கும் இக்கூட்டம் அறைகூவல் விடுக்கிறது.   அதனடிப்படையில் நாடு தழுவிய அளவில் தொடர் பரப்புரை இயக்கத்தை மேற்கொள்வது எனவும் குறிப்பாக, கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் போன்ற வடிவங்களில் கருத்துப் பரப்புதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கிறது. முதற்கட்டமாக, சென்னையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு சனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து மாபெரும் அரங்கக் கூட்டத்தை பிப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் நடத்துவதென இக்கூட்டம் முடிவு செய்கிறது.

கூட்டத்தில் பங்கேற்ற பிற தலைவர்கள்

பேராயர் எஸ்றா சற்குணம்
இந்திய சமூகநீதி இயக்கம்
விடுதலை இராசேந்திரன்
திராவிடர் விடுதலைக் கழகம்

மீ.த.பாண்டியன்
தமிழ்நாடு மக்கள் கட்சி

தோழர் தியாகு
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
கொற்றவமூர்த்தி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்

'தீக்கதிர்' குமரேசன்
கரு.அண்ணாமலை
தந்தை பெரியார் திராவிடர் கழகம்

சுந்தரராசன்
பூவுலகின் நண்பர்கள்

செந்தில்
இளந்தமிழகம் இயக்கம்
முனீர்
இந்திய தவ்கீத் ஜமாத்

இனிகோ
கிறித்தவ நல்லெண்ண இயக்கம்

அப்போலோ அனிஃபா
இசுலமிய இயக்கங்களின் கூட்டமைப்பு
வழக்கறிஞர் புகழேந்தி
தமிழ்நாடு விடுதலைக் கட்சி

ஆழி செந்தில்நாதன்
மொழியுரிமைக் கூட்டியக்கம்

எம்.ஜி.கே.நிஜாமுதீன்
இந்திய தேசிய லீக்

உமர் ஃபாரூக்
மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்

சிக்கந்தர்
வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா

முகமது இஸ்மாயில்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

ராஜ்மோகன்
எஸ்.எஃப்.ஐ.

இளையராஜா
தமிழ் மாணவர் அமைப்பு

முனைவர் பத்மாவதி
ஆய்வறிஞர்
சுபாஷினி
ஊடகவியலாளர்