தமிழீழமே நிலையான தீர்வு! உலகத் தமிழர்கள் தமது போராட்டத்தைத் தொடர வேண்டும்!

13வது சட்டத் திருத்தம் - ரணில் அறிவிப்பு இடைக்காலத் தீர்வுதான்
தமிழீழமே நிலையான தீர்வு!
உலகத் தமிழர்கள் தமது போராட்டத்தைத் தொடர வேண்டும்!

தொல்.திருமாவளவன் அறிக்கை


இலங்கையில் சிங்கள அரசின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, தமிழ் மக்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்திருக்கிறார். இலங்கையில் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்னும் அடிப்படையில், 1987ஆம் ஆண்டு உருவான.
ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின்படி, அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் 13வது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.  அதன்படி தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணம் ஒரே மாகாணமாக இணைக்கப்பட்டு அதற்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  

இந்தச் சட்டத் திருத்தத்தை கடந்த கால் நூற்றாண்டு காலமாக சிங்கள அரசு நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டது.  இராஜபக்சேவுக்கு முன்பு ஆட்சியிலிருந்த ரணில் விக்ரமசிங்கே அவர்களும் இதனை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.  ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் ரணில் விக்ரமசிங்கேவுக்கு வாக்களித்த நிலையில் அன்று ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற ரணில் விக்ரமசிங்கே இதனை நடைமுறைப்படுத்தத் தயக்கம் காட்டினார். மேலும் புலிகளின் தலைமையிலான விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் வகையில் சர்வதேச அளவில் சதிவலைகளைப் பின்னினார்.  அத்தகைய ரணில் விக்ரமசிங்கே, இன்று தலைகீழாக மாறி, 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றும், அதனடிப்படையில் தமிழ்ச் சிறுபான்மை மக்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.  இது வழக்கமான போலி வாக்குறுதியா அல்லது உண்மையிலேயே நடைமுறைப்படுத்தப் போகிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  எனினும், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை அடிப்படையில் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் இந்த நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறார் என்று தெரிகிறது. 

13வது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றினால் தமிழ்ச் சிறுபான்மை மக்களுக்கு எத்தகைய பயனும் விளையப் போவதில்லை என்பது உலகறிந்த உண்மையாகும்.  காவல்துறை, வருவாய்த் துறை, சுங்கத் துறை, நெடுஞ்சாலைத் துறை என அனைத்துமே மைய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.  மாகாண அரசுகளுக்கு அத்துறைகளில் எந்த அதிகாரமும் இல்லை.  எனினும், சிங்கள உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட 13வது சட்டத் திருத்தத்திற்கு ரணில் விக்ரமசிங்கே உயிர்கொடுக்க முன்வந்திருக்கிறார்.  இதன் மூலம் வடக்கு, கிழக்கு பகுதிகள் ஒரே மாகாணமாக அறிவிக்கப்பட வேண்டும்.  அவ்வாறு அறிவிப்பதற்கு ரணில் விக்ரமசிங்கே முன்வருவாரா என்று தெரியவில்லை.  இன்று தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு பகுதிகளை ஒரே மாகாணமாக இணைப்பதற்காகவாவது இந்தச் சட்டத் திருத்தம் பயன்படும் என்று நம்புவோம்.

மேலும், 18வது அரசியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யப் போவதாகவும் ரணில் அறிவித்திருப்பது வரவேற்கக்கூடியதாகும்.  இராஜபக்சே சீன வல்லரசின் கட்டுப்பாட்டில் இருந்தார் என்பதை ரணில் விக்ரமசிங்கே அம்பலப்படுத்தியிருக்கிறார்.  இது இந்திய அரசுக்கு அவர் சொல்லும் செய்தியாகும்.  இந்திய அரசு சிங்கள ஆட்சியாளர்களின் ஏகாதிபத்திய சார்பு நடவடிக்கைகளைக் கவனித்து அதனடிப்படையில் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ரணில் விக்ரமசிங்கேயின் இந்தக் கருத்து வலியுறுத்தலாக அமையும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விழைகிறது.

அத்துடன், ரணில் விக்ரமசிங்கே ஒரு அமெரிக்க சார்பாளர் என்கிற முத்திரை அவர் மீது உள்ளது என்பதையும் இந்திய அரசு கருத்தில்கொண்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.  

13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை ஓர் இடைக்காலத் தீர்வுக்கான நடவடிக்கையாக மட்டுமே கருத்தில்கொண்டு, தமிழீழமே நிலையான தீர்வு என்பதை அடிப்படையாகக் கொண்டு உலகத் தமிழர்கள் தமது அறவழிப் போராட்டத்தைத் தொடர வேண்டும் எனவும், அதற்கேற்ற வகையில் சர்வதேசச் சமூகத்தின் ஆதரவையும் வென்றெடுக்க வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழ்ச் சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறது.


இவண்
தொல்.திருமாவளவன்