பாரதிய சனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன் தொடர்ச்சியான இந்துத்துவப் பாசிசப் போக்குகளைக் கண்டித்து 23-12-2014இல் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

பாரதிய சனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன் 
தொடர்ச்சியான இந்துத்துவப் பாசிசப் போக்குகளைக் கண்டித்து 
23-12-2014இல் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்! 

தொல்.திருமாவளவன் அறிக்கை

பாரதிய சனதா கட்சி ஆட்சி பொறுப்பு ஏற்ற நாளிலிருந்து தொடர்ச்சியாக தமது மதவெறி மேலாதிக்க அரசியலை முதன்மைப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது.  அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான வகையிலும், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையிலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.  குறிப்பாக, மைய அரசின் அனைத்துத் துறைகளுக்குமான சமூக வலைதளங்களில் சமஸ்கிருதத்தைப்  பயன்படுத்த வேண்டுமென ஆட்சியாளர்கள் அறிவிப்புச் செய்தனர். இந்திய அரசிலமைப்புச் சட்டத்தில் 21 மொழிகள் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட ஒரு மொழியை முதன்மைப்படுத்துவதன் மூலம் பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட தேசிய இனங்களை அவமதித்தன.  அடுத்து, செப்டம்பர் 5 ஆசிரியர் நாள், முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றது.  அவர் ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்தவர்.  ஆதலால் ஆசிரியப்  பெருமக்களை ஊக்கப்படுத்தும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.  ஆனால் அந்த நாளை 'குரு உத்சவ்' என்று கொண்டாட வேண்டுமென கல்வித்துறைக்கான இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அறிவிப்புச் செய்தார்.  இதனை வெறும் பெயர் மாற்றமாகக் கருத இயலாது.  குரு என்பது ஆசிரியர்களை மட்டும் குறிக்கும் சொல் அல்ல என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியும்.  எனினும் இவ்வாறு பெயர் மாற்றம் செய்வதன் மூலம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறைக்கப்படுகிறது.  இந்த அறிவிப்பினால் தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் கடும் விமர்சனத்துக்குள்ளாகியது.

அடுத்து, இந்தியாவில் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் வாழ்ந்துவரும் நிலையில் இந்தியாவின் தேசியப் புனித நூலாக குறிப்பிட்ட மதத்திற்குரிய, அதிலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்குரிய நூலை, அனைத்து மதத்தினருக்கும் உரிய புனித நூலாக அறிவிக்க வேண்டுமென இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மாசுவராஜ் கூறினார்.  இதுவும் இந்திய அளவில் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளானது.  மேலும்  பாரதிய சனதாவைத் தவிர மற்றவர்கள் யாவரும் முறை தவறிப் பிறந்தவர்கள் என ஒரு பெண் அமைச்சர்  பேசியதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் கொந்தளிப்பு உருவானது.  அத்துடன், உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் இந்துக்கள் அல்லாத பிற மதங்களைச் சார்ந்தோரை பல்வேறு ஆசைகளைத் தூண்டி, பாசக இந்துக்களாக கட்டாய மதமாற்றம் செய்ய வைத்தனர்.  இந்த நடவடிக்கையும் இந்திய அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது.  பாரதிய சனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகி ஆதித்யநாத் 'மீண்டும் தாய் மதம் வாருங்கள்' என்று அழைப்பு விடுக்கிறார். இசுலாமியர்கள் இந்துக்களாக மாறினால் ரூ. 5 இலட்சமும், கிறித்துவர்கள் இந்துக்களாக மாறினால் ரூ. 2 இலட்சமும் வழங்குவதாக வெளிப்படையாக பாரதிய சனதா கட்சியினர் அறிவிப்புச் செய்கின்றனர்.  பாபர் மசூதி இந்தியாவின் அவமானச் சின்னம் என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் அறிவிப்புச் செய்கின்றனர்.  தாஜ்மகாலையும் இடிக்க வேண்டுமென்று கொக்கரிக்கின்றனர்.  இந்தியை நாடு முழுவதும் பரப்ப வேண்டுமென்று பாரதிய சனதாவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ராஜ்நாத் சிங் உரத்து முழங்குகிறார்.

தற்போது, நவோதயா மற்றும் கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளிலும் மைய அரசின் பாடத்திட்டமுள்ள பள்ளிகளிலும் திசம்பர் 25 கிறிஸ்மஸ் விழா அன்று விடுமுறை இல்லையெனவும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்து மகா சபையின் தலைவர் மதன் மோகன் மாளவியா ஆகியோரது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டுமென்றும், அவர்களின் நினைவாக கட்டுரைப் போட்டிகளை நடத்த வேண்டுமென்றும் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சார்பில் அப்பள்ளிகளின் நிர்வாகத்துக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  அத்துடன் அந்த நாளை ‘நல்லாட்சி நாளாகக்’ கொண்டாட வேண்டுமெனவும்  கூறியுள்ளது.  இதற்கும் நாடு தழுவிய அளவில் பெரும் எதிர்ப்புக் கிளம்பியதும் அத்தகைய முடிவைக் கைவிட்டு விட்டதாக அறிவிப்புச் செய்துள்ளனர்.

இவ்வாறு ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாளிலிருந்து பாரதிய சனதா கட்சியின் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்களும் தமது இந்துத்துவ மேலாதிக்கக் கருத்துக்களைத் திணிப்பதிலும், மறைமுகச் செயல்திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் தீவிரம் காட்டி வருவது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், சனநாயகத்திற்கும், மதவெறி சக்திகள் செய்யும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.  குறிப்பாக, தலித்துகள், இசுலாமியர்கள், கிறித்துவர்கள் போன்ற சிறுபான்மையினர் அனைவருக்கும் பாதுகாப்பற்ற உணர்வை மேலோங்கச் செய்கிறது.  எனவே சனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவையினை விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது.  

பாரதிய சனதா மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இத்தகைய தொடர்ச்சியான இந்துத்துவப் பாசிசப் போக்கைக் கண்டித்து 23.12.14 அன்று சென்னையில் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கிறது.  இவ்வார்ப்பாட்டத்திற்கு மதச்சார்பற்ற சக்திகள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் அழைப்பு விடுக்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்