இறைச்சிக்கூடத்தைத் தனியார்மயப்படுத்துவதை முற்றிலும் கைவிட வேண்டும்!

இறைச்சிக்கூடத்தைத் தனியார்மயப்படுத்துவதை
முற்றிலும் கைவிட வேண்டும்!
தொல்.திருமாவளவன் அறிக்கை


சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் நெடுங்காலமாக இயங்கிவரும் இறைச்சிக் கூடத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வெட்டி, சுத்தம் செய்து மாநகராட்சிச் சான்றிதழ் அளித்து, ஒவ்வொரு நாளும் இறைச்சி விற்பனைக்கு வெளியாகிறது.  இந்தத் தொழிலை நம்பி ஏறத்தாழ பதினான்காயிரம் குடும்பங்கள் உள்ளன.  இந்நிலையில், அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் இந்த இறைச்சிக் கூடத்தைத் தனியாருக்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவெடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.  இத்தொழிலை நம்பியுள்ள பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.  ஏனெனில், இதைத் தனியார்மயப்படுத்துவதன் மூலம் முற்றிலும் இத்தொழிலை எந்திரமயமாக்கப்படும்.  அதாவது, ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை எந்திரங்களின் மூலம் வெட்டி, சுத்தம் செய்து சில்லரை விற்பனைக் கடைகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.  தொழிலாளர்களால் செய்யப்பட்டுவந்த இந்த வேலைகளை இனி எந்திரங்களே செய்யும் நிலை ஏற்படவுள்ளது.  மற்றும் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை இறைச்சிக்குத் தகுதியானவையா என்று கண்காணிக்கும் நடவடிக்கைகளை தனியார் துறையினர் முறைப்படி மேற்கொள்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.  அதாவது, இறைச்சிக்கான ஆடு, மாடு, கோழி ஆகியவை நோய்வாய்ப்பட்டவையாக இருக்கக்கூடாது என்பதையும், சினைப்பட்ட நிலையில் அவற்றை வெட்டக் கூடாது என்பதையும் கண்காணிக்கும் நடவடிக்கைகளை தனியார் துறையினர் முறையாக மேற்கொள்வதற்கு வாய்ப்பு இருக்காது.  வணிக நோக்கத்தை மட்டுமே முதன்மையாகக் கொண்டு செயல்படும் நிலையே மேலோங்கும். 
ஆகவே, நீண்ட காலமாக நடைமுறையிலிருந்துவரும் அரசின் கண்காணிப்பே தொடர்வதற்கு இறைச்சிக்கூடத்தைத் தனியார்மயப்படுத்தும் முயற்சியை முற்றிலும் கைவிட வேண்டும்.  இத்தொழிலை நம்பியுள்ள சுமார் பதினான்காயிரம் குடும்பத்தினருக்கும் வேலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் அவர்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பையும் அரசு மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.  இறைச்சிக்கூடத்தை நவீனமயப்படுத்துவதை வரவேற்கக் கடமைப்பட்டிருந்தாலும், அதை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கும் இறைச்சி சில்லரை வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்

தொல்.திருமாவளவன்