மின் கட்டண உயர்வு அரசின் மானிய அறிவிப்பு ஒரு கண்துடைப்பே! கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்!

மின் கட்டண உயர்வு
அரசின் மானிய அறிவிப்பு ஒரு கண்துடைப்பே!
கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்!

தொல்.திருமாவளவவன் அறிக்கை


   தமிழக அரசு மின் கட்டணத்தை 15% உயர்த்தியுள்ளது.  விலைவாசி உயர்வால் கடும் அவதிக்குள்ளாகிவரும் மக்களுக்கு மேலும் ஒரு கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மின் கட்டணத்தைத் திடீரென கடுமையான அளவில் உயர்த்தியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.  இந்த மின் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்கள், நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  இந்தக் கட்டண உயர்வு மூலம் ஆண்டுக்கு 3,400 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று மின் வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.  

ஏழை எளிய மக்களைச் சுரண்டி வருமானத்தைப் பெருக்கும் மின்வாரியத்தின் இந்த நடவடிக்கை ஏற்புடையதில்லை.  மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பது தமிழ்நாடு அரசின் நிறுவனமே தவிர, தனியார் நிறுவனம் அல்ல.  இதை ஒரு வணிக நிறுவனமாக நடத்தும்போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  இரண்டு மாதங்களுக்கு, சுமார் 500 யூனிட்டுக்கும் கீழே பயன்படுத்துவோருக்கு கட்டண உயர்வை அரசே ஏற்கும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். இது வெகுமக்களின் கோபத்தைத் தணிப்பதற்கான ஓர் உத்தியாகவே தென்படுகிறது.  அதாவது, இதுவரை இல்லாத அளவுக்கு திடீரென 15% கட்டணத்தை உயர்த்தியிருப்பது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கும் என்பதால் இந்த மானிய அறிவிப்பை அரசு ஓர் உத்தியாகக் கையாண்டுள்ளது.  

இதனால் நெசவாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் போன்றவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்களேயன்றி இவர்களுக்கு எந்த வகையிலும் இந்த மானிய அறிவிப்பு பயன் தராது.  இது ஒரு கண் துடைப்பாகும்.எனவே, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறித்துள்ள இந்தக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

இவண்

தொல்.திருமாவளவன்