மீள்மதமாற்றத்தைத் தடை செய்! கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கைவிடு!

மீள்மதமாற்றத்தைத் தடை செய்!
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கைவிடு!
இந்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள்
தொல்.திருமாவளவன் அறிக்கை


பாரதிய சனதா ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஆர்.எஸ்.எஸ்., விசுவஇந்துபரிசத், பஜ்ரங்தள், தரம்ஜக்ரன் சமிதி போன்ற சங்பரிவார் அமைப்புகள் நாடெங்கிலும் தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பெரும் பதற்றத்தை உருவாக்கி வருகின்றன. பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுகூட இவ்வமைப்புகள் இவ்வளவு வெளிப்படையாக பதற்றமான அறிவிப்புகளை வெளியிடவோ, செயல்படவோ இல்லை.  பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நரேந்திரமோடி அவர்கள் இன்று பிரதமராகியிருக்கும் சூழலில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் இயக்கத்தினர், இசுலாமியர், கிறித்தவர் உள்ளிட்ட சமூகத்தினரை அச்சுறுத்தி வருகின்றனர்.  தரம்ஜக்ரன் சமிதி அமைப்பின் தலைவரான ராஜேஸ்வர சிங் என்பவர் இந்தியாவில் உள்ள அனைவருமே இந்துக்கள்தான் என்றும், இசுலாமியர்களும் கிறித்தவர்களும் இம்மண்ணில் குடியிருக்க உரிமையற்றவர்கள் என்றும் அறிவித்திருக்கிறார்.  

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன்பகவத் அண்மையில் மேற்கு வங்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது, இசுலாமியர்களையும், கிறித்தவர்களையும் மீண்டும் இந்துக்களாக மதம் மாற்றம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது என்றும், இதனை எதிர்ப்பவர்கள் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஆதரவளிக்கத் தயாரா? என்றும் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

உத்தரப்பிரதேசம், குஜராத், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏழை, எளிய அப்பாவி கிறித்தவர்களையும் இசுலாமியர்களையும் அவர்களின் வறுமை நிலையைப் பயன்படுத்தி, ஆசைகாட்டி மீண்டும் இந்துக்களாக்கும் நடவடிக்கைகளில் சங்பரிவார் அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றனர்.  ஓரிரு வாரங்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேசத்தில் விசுவஇந்து பரிசத் அமைப்பைச் சார்ந்தவர்கள் ஒரு கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை இந்துக்களாக மாற்றிய நடவடிக்கையினால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.  இதனால் இது நாடு தழுவிய விவாதமாகவும் மாறியிருக்கிறது. வருகிற திசம்பர்-25 கிறிஸ்துமஸ் நாளன்று மேலும் ஆயிரக் கணக்கான கிறித்தவர்களையும் முஸ்லிம்களையும் இந்துக்களாக மாற்றுவோம் என்றும் இந்த அமைப்புகளைச் சார்ந்தவர்கள் சவால் விடுத்து வருகின்றனர்.  இவர்களைக் கட்டுப்படுத்தும் வலிமையோ அல்லது விருப்பமோ இந்திய அரசுக்கு, குறிப்பாக நரேந்திரமோடிக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், பாரதிய சனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமைச்சர் வெங்கைய நாயுடு அவர்கள் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் தயாராக இருக்கிறது என்றும், அதை நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார். பாரதிய சனதாவும் சங்பரிவார் அமைப்புகளும் கூட்டுச் சேர்ந்து கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தைக் கொண்டுவருவதற்காகவே நாடு முழுவதும் இத்தகைய பதற்றத்தைத் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது.

இந்திய ஆட்சியாளர்களின் இத்தகைய போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.  கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் என்பது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும்.  ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தாம் விரும்பிய மதத்தில் இருக்கவோ அல்லது இன்னொரு மதத்திற்கு மாறவோ, அந்த மதத்தின் கோட்பாடுகளை நம்பவோ, அதன்படி செயல்படவோ உரிமை உள்ளது என்பதை அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு எண் 153 (அ) உறுதிப்படுத்துகிறது.  ஆனால், சங்பரிவார் அமைப்பினர் அத்தகைய அரசியலமைப்புச் சட்ட உரிமைக்கு எதிரான வகையிலும், மதவெறியைத் தூண்டி சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலும் செயல்பட்டு வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்து மதத்திலுள்ள தீண்டாமைக் கொடுமைகளைத் தடுப்பதற்கு ஒரு விழுக்காடு அளவிலும் முயற்சிகளை மேற்கொள்ளாத இவ்வமைப்பினர், சாதிக் கொடுமைகளிலிருந்து விடுபட தாம் விரும்பும் மதத்தைத் தழுவுவதற்குத் தடை விதிப்பதும், அச்சுறுத்துவதும் கொடூரமான ஃபாசிச நடவடிக்கையாகும்.

மதம் மாறும் நடவடிக்கைகள் தன்னியல்பாக நிகழ்கிறது அல்லது கட்டாயத்தின்பேரில் நிகழ்கிறது என்பதை இந்திய ஆட்சியாளர்கள் எவ்வாறு வரையறை செய்யப் போகின்றனர் என்பது விளங்கவில்லை.  தன்னியல்பாக நடைபெறும் அத்தனை மதமாற்ற நிகழ்வுகளையும் கட்டாயத்தின்பேரில் நிகழ்வதாக முத்திரைகுத்தவும், கிறித்தவ, இசுலாமிய மத குருமார்களை அச்சுறுத்தவும் பழிவாங்கவுமே இச்சட்டம் பயன்படும்.

எனவே, இந்திய அரசு மதசார்பின்மைக் கோட்பாட்டைக் காப்பாற்றும் வகையில் அனைத்து மதத்தினரும் சுதந்திரமாக இம்மண்ணில் வாழவும், தாம் விரும்பும் மதங்களை ஏற்றுக்கொள்ளவும் அனுமதிக்க வேண்டும்.  தலித்துகளையும் சிறுபான்மையினரையும் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுவரும் சங்பரிவார் அமைப்புகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.  தலித் மற்றும் சிறுபான்மையினருக்கான அமைப்புகள், இடதுசாரிகள் மற்றும் பிற சனநாயக சக்திகள் அனைவரும் ஒருங்கிணைந்து பாரதிய சனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் இத்தகைய சனநாயக விரோத நடவடிக்கைகளைத் தடுத்திட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும், குறிப்பாக கட்டாய மீள்மதமாற்ற நடவடிக்கைகளையும், அரசியல் உள்நோக்கத்துடன்கூடிய கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தை நிறைவேற்றவிடாமலும் தடுத்திட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்