பாலுறவு இணையதளங்களுக்குத் தடை மற்றும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தேசிய அளவில் கொள்கைகளை இந்திய அரசு வரையறுக்கவேண்டும்!

பாலுறவு இணையதளங்களுக்குத் தடை 
மற்றும் மதுவிலக்கை  நடைமுறைப்படுத்த தேசிய அளவில் 
கொள்கைகளை இந்திய அரசு  வரையறுக்கவேண்டும்! 
தொல்.திருமாவளவன் அறிக்கை!

அண்மையில் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே நந்தினி என்கிற பள்ளி சிறுமியும்,வேலூர் மாவட்டம் குடியாத்தம் காங்குப்பம் கிராமம் கிருத்திகா  என்கிற பள்ளி சிறுமியும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது. 10 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை இத்தகையக் கொடுமைகளுக்கு உள்ளாக்குவது ,இத்தேசத்திற்கு நேர்ந்துள்ளக் கொடுமையாகும். இது தமிழகத்தில் மட்டுமல்ல,இந்தியா முழுவதும் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் பேரவலமாகும..நந்தினி மற்றும் கிருத்திகாவை பாழாக்கிப் படுகொலைச் செய்த இழிச்செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

தேனி சின்னமனுர் நந்தினியை பாழ்படுத்திய இளைஞர்களும்,குடிபோதையில் இத்தகையச் செயலில் ஈடுப்பட்டதாகத் தெரிய வருகிறது. குடியாத்தம் கிருத்திகாவை  பாழ்படுத்திய மாணவன் அடிக்கடி இணையதளங்களில் பாலுறவுக் காட்சிகளைப் பார்க்கக் கூடியவர் என்று தெரிய வருகிறது. இளைய தலைமுறையினைச் சீரழிக்கும் வகையிலான சமூக சூழல்களை அனுமதித்துக் கொண்டு, இத்தகையக் கொடும் குற்றங்களை எவ்வாறுத் தடுத்திட இயலும். சுமார் 20 வயது தாண்டுவதற்குள்ளாக மதுபழக்கத்திற்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது.நாடெங்கிலும் ஊருக்கு ஊர்  அரசே மதுபானக்கடைகளைத் திறந்துவைத்து சொந்த குடிமக்களையேக் குடிப்பழக்கத்திற்கு ஆளாக்கும் அவலம் உள்ளது. பெற்றோரும்,பிள்ளைகளும் கூடி குற்றவுணர்வின்றி குடிப் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆசிரியர்களும் மாணவர்களும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி வருவதையும் காண முடிகிறது.மனித உறவுகள் இதனால் கடுமையாகப் பாதிப்படைந்து வருகின்றன. அரசின் தவறானக் கொள்கை முடிவு தான் நந்தினி,கிருத்திகா போன்ற பச்சிளம் சிறுமிகளின் சீரழிவுக்குக் காரணமென்பதை நாம் உணர வேண்டும்..அத்துடன் கைப்பேசிகளிலும்,கணினிகளிலும் பாலுறவுக் காட்சிகளைக் கொண்ட இணையதளங்களால் இளம்தலைமுறையினர் பாதை தவறும் நிலை ஏற்பட்டுள்ளது. குடியாத்தம் கிருத்திகாவை பாலுறவுக்குக் கட்டாயப்படுத்திப் படுகொலை செய்தவன் பதினைந்து வயது மாணவன் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. விசாரணையில் அவன் இணையதளங்களில் பாலுறவுக் காட்சிகளைப் பார்க்ககூடியவன் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி அவனுக்கு குடிப்பழக்கமும் உண்டு என்று விசாரணையில்  தெரிய வருகிறது.

பள்ளி சிறுவர்கள் பாழாவதற்கு இச்சமுக சூழல்களும் காரணங்களாக உள்ளன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.அரபு நாடுகளில் பாலுறவு அடங்கிய இணையதளங்களை 100 விழுக்காடு தடை செய்துள்ளனர்.அவ்வாறு, இந்திய அரசு அத்தகைய இணையதளங்களுக்கு ஏன் தடைவிதிக்கக் கூடாது?. சிறுமிகளை மட்டுமின்றி பாதை தவறிச் செல்லும் சிறுவர்களைக் காப்பாற்ற வேண்டியப் பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உள்ளதென்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக் காட்டுகிறது.

தெருக்குத் தெரு திறந்துவைக்கப்பட்டுள்ள மதுபானக்கடைகளை அரசு உடனடியாக மூட வேண்டும். பாலுறவு இணையதளங்களைத தடைச் செய்ய வேண்டும். இவற்றிக்கு மாநில அரசுகள் மட்டுமே பொறுப்பாக முடியாது.இந்திய அரசு, இவைக் குறித்து தேசியக் கொள்கை ஒன்றை  வரையறுக்க வேண்டும். மதுவிலக்கு என்பது இந்திய அரசின் தேசியக் கொள்கையாக அறிவிக்கப்பட்டு அரசு மதுபான கடைகள் யாவற்றையும் உடனடியாக இழுத்து மூட வேண்டும். அதற்கான சட்டத்தையும் இந்திய அரசு இயற்ற வேண்டும். அதேபோலப் பாலுறவு இணையதளங்களைத் தடைச் செய்யும் வகையில்  தேசியக் கொள்கைகளை வரையறுப்பதுடன் அவற்றிக்கான சட்டத்தையும் இயற்ற வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  வேண்டுகோள் விடுக்கிறது.

இவண்

தொல்.திருமாவளன்