ஸ்மிருதி இராணியை அமைச்சரவையிலிருந்து விலக்க வேண்டும்!

தொடர்ந்து சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டுவரும்
ஸ்மிருதி இராணியை அமைச்சரவையிலிருந்து விலக்க வேண்டும்!
எளிய மக்களின் மீது இந்துத்துவா கொள்கையைத் 
திணிக்கும் முயற்சியை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்!

தொல்.திருமாவளவன் அறிக்கை


இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இராணி அவர்கள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய அறிவிப்புகளைச் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.  அவ்வாறான அறிவிப்புகளை வெளியிடுவதும் பின்னர் அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்வதும் அவரது வாடிக்கையாக உள்ளது.  தற்போது, வருகிற திசம்பர் 25 அன்று நவோதயா பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் மத்திய அரசு பாடத்திட்டம் உள்ள பள்ளிகள் அனைத்திலும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கான விடுமுறை இல்லை என்றும், அந்நாளில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்துமகா சபைத் தலைவர் மதன்மோகன் மாளவியா ஆகியோரின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட வேண்டும் என்றும் அவருடைய அமைச்சகத்திலிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.  குறிப்பாக, அந்த நாளில் மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டி உள்ளிட்ட தனித்திறன் போட்டிகள் நடத்த வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திசம்பர் 25 உலக நாடுகள் அனைத்திலும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவது யாவரும் அறிந்ததேயாகும்.  இந்தியாவிலும் கிறித்தவர்கள் அந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.  அதனால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பள்ளிகள் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிப்பது வாடிக்கையாகும்.  இவை அனைத்தும் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த யாவரும் அறிந்த உண்மையேயாகும். ஆனால், வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு அந்த நாளில் பள்ளிகள் திறந்திருக்க வேண்டும் என்றும், திருவாளர்கள் வாஜ்பாய், மதன்மோகன் மாளவியா ஆகியோரின் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்றும், குறிப்பாக, அந்நாளை 'நல்லாட்சி நிர்வாக நாளாகக்' கொண்டாட வேண்டும் என்றும் அறிவிப்புச் செய்துள்ளனர்.  கிறித்தவச் சிறுபான்மையினரின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஆளும் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருவதை இதன்மூலம் அறிய முடிகிறது.

ஏற்கனவே, செப்டம்பர் 5 - ஆசிரியர் நாளை 'குரு உத்சவ நாளாகக்' கொண்டாட வேண்டும் என்று அறிவிப்புச் செய்தனர்.  பின்னர், சமூக வலைத் தளங்களில் அனைத்து அரசுத் துறைகளும் சமற்கிருதத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டனர்.  அடுத்து, பா.ஜ.க. அரசு தமது அடிப்படைக் கொள்கையான இந்துத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் பகவத்கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்க வேண்டுமென வெளிப்படையாக அறிவிப்புச் செய்தனர்.  இத்தகைய போக்குகளுக்கு எதிராக இந்திய அளவில் கடும் விமர்சனங்கள் வெளிவந்தன.  இதனால் அவ்வப்போது இந்திய அரசியல் சூழல் கொந்தளிப்புக்குள்ளாகி வருகிறது.  மக்கள் எதிர்ப்பு கடுமையாக வலுப்பெறும் சூழலில் தமது நிலைப்பாட்டிற்கு வருத்தம் தெரிவிப்பதும், மாற்றிக்கொள்வதும் அவர்களின் போக்காக உள்ளது.  அதே போல, தற்போதும் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று அரசு விடுமுறை இல்லை என அறிவிப்புச் செய்ததுடன் வாஜ்பாய், மதன்மோகன் மாளவியா ஆகியோரின் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று வற்புறுத்தியவுடன் சிறுபான்மைச் சமூகத்திடமிருந்தும் சனநாயக சக்திகளிடமிருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.  இதனையடுத்து, தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதாக தொடர்புடைய அமைச்சர் தகவல் வெளியிட்டிருக்கிறார்.  

இவ்வாறு ஓர் அறிவிப்புச் செய்வதும் பின்னர் திரும்பப் பெறுவதும், வருத்தம் தெரிவிப்பதும் பாரதிய சனதா ஆட்சியிலுள்ள அமைச்சர்களின் போக்காக உள்ளது.  இவை தன்னியல்பாக நிகழ்கின்றன என்று நம்ப முடியவில்லை.  திரு. மோடி அவர்களின் தலைமையிலான இந்திய அரசு அடிப்படையில் தீவிர இந்துத்துவா கொள்கையைக் கொண்டிருக்கிறது என்பதையும், அதனை அவ்வப்போது உயர்த்திப் பிடிக்கிறது என்பதையும் இத்தகைய நடவடிக்கைகளிலிருந்து அறிய முடிகிறது.

எனவே, இந்திய அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிப்பதுடன், அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்களை அப்பதவியிலிருந்து உடனடியாக விலக்க வேண்டுமென்று, எளிய மக்களின் மீது சிறுபான்மையினருக்கும் ஒடுக்குப்பட்டோருக்கும் எதிரான இந்துத்துவா கொள்கையைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் எனவும் திரு.நரேந்திரமோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.

இவண்

தொல்.திருமாவளவன்