எழுத்தாளர் பெருமாள் முருகனின் நூலுக்குத் தடை கோரும் இந்துத்துவ அமைப்புகள் கருத்துரிமையைப் பறிக்கும் நடவடிக்கைக்கு தொல்.திருமாவளவன் கண்டனம்

எழுத்தாளர் பெருமாள் முருகனின் நூலுக்குத் தடை கோரும் இந்துத்துவ அமைப்புகள்
கருத்துரிமையைப் பறிக்கும் நடவடிக்கைக்கு
தொல்.திருமாவளவன் கண்டனம்

மறுமதமாற்றம் என்று நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புகள் தமிழ்நாட்டைக் கலவர பூமியாக மாற்றுவதற்குக் குறிவைத்துச் செயல்பட்டு வருகின்றனர்.  அதன் ஒரு வெளிப்பாடாக, நாடறிந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூலைத் தடை செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

பெருமாள் முருகன் பல நூல்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர்.  அவரது நாவல்கள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுப் பாராட்டுப் பெற்றவை. அவர் 2010ஆம் ஆண்டில் எழுதிய ‘மாதொருபாகன்’ என்ற நாவல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.  அது கொங்கு மண்டலத்தில் மிகவும் அன்போடு இல்லற வாழ்வை நடத்தும் ஒரு குடும்பத்தைப் பற்றியது. அந்த நாவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பண்பாட்டு வழக்கம் ஒன்றைக் காரணமாகக்காட்டி 4 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அதைத் தடை செய்ய வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன.  அந்த நாவலின் படிகளைத் தீயிட்டுக் கொளுத்தியும், அதை எழுதியவரையும் பதிப்பித்தவரையும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும், வேறு சில மதவாத அமைப்புகளும் திருச்செங்கோடு பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.  எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. காவல்துறையிடம் பாதுகாப்புக் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்துத்துவ அமைப்புகள் எழுத்துரிமையை, கருத்துரிமையைப் பறிப்பதில் எப்போதும் முனைப்புக் காட்டி வருபவை என்பது நாடறிந்த உண்மையாகும்.  தமிழ்நாட்டிலும் அதே உத்தியை அவர்கள் கையிலெடுத்துள்ளனர்.  இதை சனநாயகத்தின்பால் அக்கறைகொண்டோர் அனுமதிக்க முடியாது.

எழுத்தாளருக்கும் பதிப்பாளருக்கும் தமிழக அரசு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். எழுத்தாளர் பெருமாள் முருகனைக் குறிவைத்து இந்துத்துவ அமைப்புகள் மேற்கொண்டிருக்கும் கருத்துரிமைப் பறிப்பு நடவடிக்கையை முறியடிப்பதற்கு மதச்சார்ப்றற சக்திகள் முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம். 

இவண்
தொல்.திருமாவளவன்