கூடங்குளத்தில் மேலும் அணு உலைகளை நிறுவினால் இந்தியா மரண காடாகும்!

கூடங்குளத்தில் மேலும் அணு உலைகளை நிறுவினால்
இந்தியா மரண காடாகும்!
தொல்.திருமாவளவன் எச்சரிக்கை

கூடங்குளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் கருத்துகளை நிராகரித்தும் உணர்வுகளை உதாசீனப்படுத்தியும் கூடங்குளத்தில் அணு உலைகளை எழுப்பியது காங்கிரஸ் தலைமையிலான கடந்த கால ஆட்சி.  தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மக்களின் உணர்வுகளை நிராகரித்ததாலேயே அந்த ஆட்சி கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் புதிதாகப் பதவியேற்றுள்ள பா.ஜ.க. அரசும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இந்தியாவில் பல இடங்களில் 12 அணு உலைகளை நிறுவுவதற்கு ரஷ்ய அதிபர் புதினுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப் போவதாக அறிவித்திருக்கிறது.

உலகெங்கிலும் பல வளர்ந்த நாடுகள் அழிவு சக்தியான அணு மின் நிலையங்களை மூடிக் கொண்டிருக்கும்போது வளர்ச்சியின் பெயரால் இந்த அழிவு சக்தியை அனுமதிப்பதன் மூலம் இந்திய மக்களுக்கு கொல்லைப்புறத்தில் ஒரு இடுகாட்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறது இந்திய அரசு.

கூடங்குளத்தில் அணு உலைகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்ச்சியாக பல பிரச்சனைகளைச் சந்தித்து வந்திருக்கின்றன.  மின் கசிவு, விபத்து என அது சந்தித்து வரும் பிரச்சனைகள் பற்றி அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த யாரும் இதுவரை வெளிப்படையாகப் பேசவும் இல்லை, மக்களின் நியாயமான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கவும் இல்லை.  மாறாக, போராடும் மக்களைப் பார்த்து அந்நிய நிதி பெறுபவர்கள், தேச விரோதிகள் என்று அவதூறுகளை மட்டுமே வீசியிருக்கிறார்கள்.

இன்று கூடங்குளம் அணுஉலைகளில் உண்டாகியிருக்கும் பிரச்னைகள் அந்த மக்களின் அச்சங்களில் உள்ள நியாயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன.

கூடங்குளம் அணுஉலைகளிலேயே தரமற்ற பாகங்கள் உபயோகம், மின் கசிவு போன்ற பல ஆபத்தான பிரச்சனைகள் இருக்கும்போது மேலும் 12 அணு உலைகளை அதே ரஷ்யாவிடமிருந்து வாங்குவது என்பது மக்கள் மீதான அக்கறையின்மையை, அரசாங்கத்தின் அதிகார வெறியை, அலட்சியப் போக்கையே காட்டுகிறது.

இந்த ஆபத்தான ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிராக மக்கள் ஆதரவு சக்திகள் அனைத்தும் தங்களது குரலை வலிமையாக எழுப்ப வேண்டியது அவசியம். இப்போதிருக்கும் கூடங்குளம் அணுஉலைகளில் உள்ள பிரச்னைகள் பற்றிய உண்மைகளை அந்தப் பகுதியில் வாழ்பவர்கள் என்கிற முறையில் மக்களிடம் பகிர்ந்து கொள்வதோடு மேலும் அணுஉலைகளை நிறுவும் திட்டத்தை மக்கள் நலன் கருதி மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கோருகிறது.  மக்களின் நியாயமான உணர்வுகளை, அவர்களது அறம் சார்ந்த போராட்டங்களை மதிக்காத எந்த ஆட்சியும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து தூக்கியெறியப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் பா.ஜ.க. அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் நினைவூட்ட விரும்புகிறது.

இவண்

தொல்.திருமாவளவன்