போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு. தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் தமிழக அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!

தமிழ்நாடு அரசு கழகப் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வுக் குறித்து முன்றாண்டுகளுக்குஒருமுறை பேச்சு வார்த்தை நடுத்துவது வழக்கம்.கடந்த 1977 ஆம் ஆண்டு உருவான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.இதனை ஐந்தாண்டுகளுக்கொருமுறை என மாற்றுவதற்கு ,தமிழக அரசு 2001 ஆம் ஆண்டு முயற்சித்தது. தொழிற்சங்களின் கடும் எதிர்ப்பால் இம்முயற்சிக் கைவிடப்பட்டது.கடந்த 2010 ஆம் ஆண்டு நடைப்பெற்றப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர்,2013 ஆகஸ்ட் மாதம் முறைப்படி பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும்.ஆனால் கடந்த ஓராண்டுக்கு மேலாக தமிழக அரசு இந்த நடைமுறையை தள்ளிப்போட்டு வந்தது.இவ்வாறு காலம் தாழ்த்துவதன் மூலம் ஊதிய உயர்வுத் தொடர்பானப் பேச்சுவார்த்தையை ஐந்தாண்டுகளுக்கொருமுறை என மாற்றுவதற்கு மறைமுகமான முயற்சிகளை மேற்கொள்கிறது என அய்யப்பட நேர்ந்துள்ளது.தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான அழுத்தத்தின் காரணமாக இரண்டுகட்டப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. 

எனினும் அது தோல்வியில் முடிவடைந்தது.ஏனெனில் அரசுத் தரப்பிலிருந்து முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ள அதிகாரிகள் ஒருவரும் அப்பேச்சுவார்த்தையில்  பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து திசம்பர் 29 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையிலும்,அரசுத் தரப்பில் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது தெரிய வருகிறது.சனவரி 30,2015க்கு பின்னர், அரசின் கருத்தைக் கேட்டப் பிறகு மீண்டும் பேசுவோம் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அரசின் இந்த அணுகுமுறை அனைத்துத் தொழிற்சங்கங்களை அவமதித்துள்ளது.தொழிற்சங்கங்களின் போராட்ட அறிவிப்புக்குப் பிறகு தொழிலாளர்களை உருட்டி மிரட்டிப் பணியவைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.அரசின் இத்தகையப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.

பொதுமக்களின் நலன் கருதியும்,தொழிலாளர்கள் நலன் கருதியும்,தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தவிர்க்கும் வகையில்,  தொழிற்சங்கப் பிரிதிநிதிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும்,தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளைப் பொறுப்புடன் பரிசீலிக்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு விடுதலைச்சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமானக் கோரிக்கைகளை ஆதரிக்கும் வகையில் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை விடுதலைச்சிறுத்தைகள் வரவேற்கிறது.திசம்பர் 29 முதல் தொடங்கும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகளின் தொழிற்சங்கமான அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி முழுமையாக பங்கேற்கும் என்பதுடன் இப்போராட்டத்தை அமைதிவழியில் வெற்றிகரமாக நடத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும்,பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.இவண்
தொல்.திருமாவளவன்