கார்ப்பரேட்டுகளுக்கு உதவ விவசாயிகளை ஒழித்துக்கட்டுவதா?

கார்ப்பரேட்டுகளுக்கு உதவ விவசாயிகளை ஒழித்துக்கட்டுவதா?
நிலம் கையகப்படுத்தும் அவசர திருத்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது!
மோடி அரசுக்கு தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!

 
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டத்தை (Right to Fair Compensation and Transparency in Rehabilitation and Resettlement Act, 2013) பலவீனப்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்ய மோடி அரசு முனைந்துள்ளது.

தனியார் நிறுவனங்களின் தேவைக்கென ஓர் இடத்தில் நிலத்தைக் கையகப்படுத்தவேண்டுமென்றால் அதனால் பாதிக்கப்படும் பொதுமக்களில் 80% பேர் அதற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் எனவும் அப்படிக் கையகப்படுத்துவதால் ஏற்படும் சமூகத் தாக்கங்கள் என்ன என்பதை அறிய ' சமூகத் தாக்கங்கள் ஆய்வு அறிக்கை' தயாரிக்கப்படுவது கட்டாயமென்றும் அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த இரண்டு அம்சங்களையும் நீக்கி இப்போது அவசரச் சட்டம் பிறப்பிக்க மோடி அரசு முடிவுசெய்துள்ளது. அதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டால் விளை நிலங்களை எளிதாகக் கையகப்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுத்துவிடமுடியும். ஏற்கனவே கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலைசெய்துகொள்ளும் விவசாயிகள் இந்த அவசரச் சட்டத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மக்கள் விரோத அவசரச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் என மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்