எழுச்சித்தமிழரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் வெறுப்பை விதைக்கக் கூடாது!
இயேசு பெருமான் வழியில் 
மனிதநேயத்தை மேம்படுத்துவோம்

தொல்.திருமாவளவன் கிறிஸ்துமஸ் வாழ்த்து

இயேசுபெருமான் பிறந்த நாளில் கிறித்தவப் பெருமக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மாமனிதர் இயேசு பெருமான், மனிதநேயமே உலகின் தலைசிறந்த கோட்பாடு என்பதை உலகிற்கு உணர்த்தினார்.  அன்பும் அறமும் மனிதநேயத்திற்கான அடிப்படை என்பதைப் போதித்தார்.  மனிதர்களுக்கிடையில் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் நிலவும் வேறுபாடுகளைக் கூர்மைப்படுத்துவதோ, வெறுப்பை விதைப்பதோ கூடாது என்றும் பரப்புரை மேற்கொண்டார்.  வெறுப்பும் பழிவாங்கும்போக்கும் மனிதனை துன்பத்தில் ஆழ்த்துகிறது என்றும் அவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டுமென்றும் மனித சமூகத்திற்கு அறிவுரை வழங்கினார்.  “சூரியன் அழிந்தாலும் பூமி அழிந்தாலும் என் வார்த்தைகள் அழியாமல் வல்லமையோடு இருக்கும்” என்று இயேசு பெருமான் தன் கருத்தின் மீதும் சொற்களின் மீதும் உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.   அதனடிப்படையில் இன்று உலகமே போற்றும் மகானாய் இயேசு பெருமான் விளங்குகிறார்.  அவருடைய சொற்கள் மனித சமூகத்தை வழிநடத்துகின்றன.

இயேசுபெருமானின் வழிகாட்டுதலின்படி அன்பையும் அறத்தையும் ஏற்போம்! மனிதநேயத்தைப் போற்றுவோம்! தனி மனித அமைதி, சமூக அமைதி மற்றும் பொது அமைதியை நிலைநாட்டுவோம்! சமூக நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தும் வகையில்   வெறுப்பை விதைத்து, பதற்றத்தை உருவாக்கி, பகையை மூட்டி, ஆதாயம் தேடும் தற்குறிகளைக் காலம் அம்பலப்படுத்தும் எனும் நம்பிக்கையோடு இயேசு பெருமான் காட்டிய வழியில் மனிதநேயத்தை மேம்படுத்த உறுதியேற்போம்! என யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அறைகூவல் விடுப்பதோடு, அவர் பிறந்த இந்த நாளில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவண்

தொல்.திருமாவளவன்